விபத்தில் பலியான துப்புரவு பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.26½ லட்சம் நஷ்ட ஈடு விருதுநகர் கோர்ட்டு உத்தரவு
விபத்தில் பலியான துப்புரவு பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.26½ லட்சம் நஷ்ட ஈடு வழங்க விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளாது.
விருதுநகர்,
அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கோபால் (வயது 52). அருப்புக்கோட்டை நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்த இவர் கடந்த 22–1–2014 அன்று தோணுகால் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இவரது மனைவி பூமதி மற்றும் குடும்பத்தினர் நஷ்ட ஈடு கோரி விருதுநகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி முருகேசன், விபத்தில் பலியான கோபாலின் குடும்பத்தினருக்கு ரூ.26 லட்சத்து 57 ஆயிரம் நஷ்ட ஈட்டுத் தொகையினை விருதுநகரில் உள்ள ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் 7½ சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார்.
திருச்சுழி அருகே தென்பாலை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பணன்(வயது 60). பால் வியாபாரியான இவர் கடந்த 23–1–2011 அன்று தென்பாலை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அரசு போக்குவரத்துக்கழக பஸ் அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இவரது மனைவி செண்பகம் மற்றும் குடும்பத்தினர் நஷ்டஈடு கோரி விருதுநகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி முருகேசன், விபத்தில் பலியான கருப்பணன் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் ரூ.3 லட்சத்தி 12 ஆயிரம் நஷ்ட ஈட்டுத் தொகையினை 7½ சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார்.