ராஜீவ் காந்தி கொலைக் கைதி ரவிச்சந்திரனின் பாதுகாப்பு போலீசாருக்கான கட்டணத்தை அரசே வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
ராஜீவ் காந்தி கொலைக் கைதி ரவிச்சந்திரனின் பாதுகாப்பு போலீசாருக்கான கட்டணத்தை அரசே வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக மதுரை சிறையில் உள்ள ரவிச்சந்திரன், பரோல் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி கடந்த 1–ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அப்போது தங்களது வழிக்காவல் பணிக்கு வரும் போலீசாருக்கான கட்டணத்தை தாங்களே செலுத்த வேண்டும் என்று ரவிச்சந்திரனுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு நேற்று முறையிடப்பட்டது. அப்போது, கடந்த 2012–ம் ஆண்டில் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கியபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கான கட்டணத்தை தமிழக அரசு தான் வழங்கியது. அதுபோல தற்போதும் அரசு வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவில் திருத்த வேண்டும். மேலும் ரவிச்சந்திரன் சிறையில் இருந்தபோது வேலை பார்த்ததற்காக வழங்கப்பட்ட கூலி ரூ.20 ஆயிரத்தை ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ரவிச்சந்திரனுக்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கான கட்டணத்தை அரசே வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.