இரோம் சர்மிளா பாஸ்போர்ட் கேட்டு வழக்கு மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


இரோம் சர்மிளா பாஸ்போர்ட் கேட்டு வழக்கு மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 March 2018 3:30 AM IST (Updated: 15 March 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

இரோம் சர்மிளா பாஸ்போர்ட் கேட்டு வழக்கு மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வசித்து வரும் இரோம் சர்மிளா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

மனித உரிமை ஆர்வலர் மற்றும் சமூக ஆர்வலராக உள்ளேன். கொடைக்கானலில் தற்காலிகமாக வசித்து வருகிறேன். மணிப்பூர் அரசு என் மீது குற்றவியல் வழக்கு இல்லை என்று சான்றிதழ் வழங்கியது. கடந்த 16.10.2017 அன்று மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் வழங்குமாறு விண்ணப்பித்தேன். ஆனால் இதுவரை பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் ஜெனீவாவில் கடந்த பிப்ரவரி மாதம் 26–ந்தேதி முதல் ஐ.நா.சபையின் மனித உரிமைக்கான 37–வது கருத்தரங்கு நடந்து வருகிறது. அதில் இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட, நடத்தப்படும் வன்முறைகள் குறித்து வருகிற (மார்ச்) 23–ந்தேதி நடக்கும் கருத்தரங்கில் பேசுவதற்காக அழைக்கப்பட்டுள்ளேன்.

எனவே அங்கு செல்ல கொள்ள பாஸ்போர்ட் அவசியம். என் மீது எந்த குற்றவியல் வழக்குகளும் இல்லாதபட்சத்தில் பாஸ்போர்ட் வழங்க மறுக்கின்றனர். எனவே எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், இதுகுறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை வருகிற 21–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story