மாணவர்களை நூலகங்களில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் தலைமைஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
அரசு பள்ளி மாணவர்களை நூலகங்களில் உறுப்பினர்களாக சேர்த்து கற்கும் திறனை வளர்க்க வேண்டும் என தலைமைஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை,
மாணவர்களின் தமிழ் திறனை வளர்த்த தமிழாசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தொடக்கக் கல்வி அலுவலர் இளவரசு, அனைவருக்கும் கல்வி திட்ட உதவித் திட்ட அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் அடிப்படை தமிழ், எழுத படிக்க தெரியாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் தமிழ் அடிப்படையை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பல்வேறு ஆசிரியர்கள் தமிழில் பின்தங்கி காணப்படும் மாணவர்களுக்கு தமிழ், எழுத படிக்க வைத்துள்ளனர்.
ஒரு மாணவன் தாய் மொழி தெரிந்தால் தான் பிற பாடங்கள் அவனுக்கு புரியும். விரைவில் நமது மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களாக அறிவிக்க உள்ளோம். அதற்கு அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்பு தந்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இலக்கை எட்டிய தமிழாசிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள வேறு பள்ளிக்கு சென்று கல்வியில் பின்தங்கி உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் தமிழ் செய்தித்தாள்கள் வாங்க வேண்டும். மாணவர்களுக்கு தமிழ்செய்தித்தாள் படிக்க வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை அருகில் உள்ள நூலகங்களில் உறுப்பினர்களாக சேர்த்து கற்கும் திறனை வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். விழாவில் தமிழாசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story