செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.2½ கோடியில் தாய்-சேய் நலப்பிரிவு தொடங்கப்படுகிறது


செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.2½ கோடியில் தாய்-சேய் நலப்பிரிவு தொடங்கப்படுகிறது
x
தினத்தந்தி 15 March 2018 3:30 AM IST (Updated: 15 March 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.2½ கோடியில் தாய்-சேய் நலப்பிரிவு தொடங்கப்பட உள்ளது என மனுநீதிநாள் முகாமில் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

தூசி, 

வெம்பாக்கம் தாலுகா தூசி, வாகை, அப்துல்லாபுரம் மற்றும் குரங்கணில்முட்டம் ஆகிய கிராமங்களுக்கான மனுநீதிநாள் முகாம் தூசி கிராமத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு செய்யாறு உதவி கலெக்டர் கே.அரிதாஸ் (பொறுப்பு) தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு தாசில்தார் ஜி.பெருமாள், வட்ட வழங்கல் அலுவலர் பொன்னுசாமி, மண்டல துணை தாசில்தார் துளசிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் சுபாஷ்சந்தர் வரவேற்றார். இதில் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, வாரிசு சான்று, சிறு விவசாயி சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட 160 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் செயல்திட்டங்களை தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு செய்து வருகிறது. செய்யாறு தொகுதி மக்கள் பெரிதும் பயன்பெறும் வகையில் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் ரூ.2½ கோடியில் தாய்-சேய் நல சிறப்பு பிரிவு தொடங்கப்பட உள்ளது. அதே போல செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.1 கோடியில் பொன்விழா கலையரங்கம் அமைக்கப்பட உள்ளது. அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைய அரசு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்

தொடர்ந்து தூசி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தென்னை மரக்கன்றுகளை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ மற்றும் உதவி கலெக்டர் கே.அரிதாஸ்(பொறுப்பு) ஆகியோர் நட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பெருங்கட்டூர் வட்டார மருத்துவர் கிருஷ்ணமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், அ.தி.மு.க நிர்வாகிகள் டி.பி.துரை, எம்.மகேந்திரன், அரங்கநாதன், நவீன்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Next Story