நடத்தையில் சந்தேகப்பட்டு, குழந்தைகள் கண்முன்னே மனைவியை சுத்தியலால் தாக்கி கொன்றவர் கைது


நடத்தையில் சந்தேகப்பட்டு, குழந்தைகள் கண்முன்னே மனைவியை சுத்தியலால் தாக்கி கொன்றவர் கைது
x
தினத்தந்தி 15 March 2018 4:14 AM IST (Updated: 15 March 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

நடத்தையில் சந்தேகம் காரணமாக குழந்தைகள் கண்முன்னே மனைவியை சுத்தியலால் தாக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

புனே,

நடத்தையில் சந்தேகம் காரணமாக குழந்தைகள் கண்முன்னே மனைவியை சுத்தியலால் தாக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

நடத்தையில் சந்தேகம்

புனே ஹடப்சர் கேம்பஸ் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் பவார் (வயது34). இவரது மனைவி ரேணுகா(31). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட சஞ்சய் பவாருக்கு மனைவி ரேணுகாவின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இதன் காரணமாக கணவர், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் ரேணுகா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

பின்னர் 2 நாள் கழித்து ரேணுகா தனது பெற்றோரை உடன் அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் இவர்களுக்கிடையே வாக்குவாதம் உண்டானது.

மனைவி கொலை

இதில் ஆத்திரமடைந்த சஞ்சய் பவார் வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து ரேணுகாவின் தலையில் பலமாக தாக்கி உள்ளார். இதில் மண்டை உடைந்து ரேணுகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்கள் கண்முன்னேயே தாயை சுத்தியலால் தாக்கி தந்தை கொலை செய்ததை பார்த்து குழந்தைகள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரேணுகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சய் பவாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story