ஈரோட்டில் மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்
ஈரோட்டில் மணல் பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு,
திருச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஈரோட்டிற்கு மணல் கடத்தி வருவதாக ஈரோடு மாவட்ட மணல் லாரி உரிமையாளர் நலச்சங்கத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த சங்கத்தை சேர்ந்த சிலர் ஈரோடு கனிராவுத்தர்குளம் செங்குந்தர் நகர் பகுதியில் நேற்று நின்றுகொண்டு கண்காணித்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை அவர்கள் தடுத்து நிறுத்தி பார்வையிட்டனர். அந்த லாரியில் மணல் பாரம் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் இதுபற்றி ஈரோடு மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தனி வருவாய் ஆய்வாளர் ரவி மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த லாரி கரூர் மாவட்டம் கீழக்காரபாளையம் பகுதியை சேர்ந்த மனோஜ்ராம் என்பவருக்கு சொந்தமானது என்றும், அரவக்குறிச்சி குன்னஞ்சத்திரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 30) என்பவர் ஓட்டி வந்ததும், லாரியில் உரிய ஆவணங்களின்றி 5 யூனிட் மணல் பாரம் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.
இதேபோல் கரூர் மாவட்டத்தில் இருந்து உரிய ஆவணங்களின்றி 5 யூனிட் மணல் பாரம் ஏற்றிவந்த மற்றொரு லாரி ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று பிடிபட்டது. இந்த லாரி கரூர் மணிமங்கலம் அருகே உள்ள துவாரபாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமானது என்பதும், கரூர் வெங்கமேடு வி.வி.ஜி.நகரை சேர்ந்த சண்முகம் (30) என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து ஈரோடு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ நர்மதாதேவி மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story