விபரீத விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி


விபரீத விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி
x
தினத்தந்தி 15 March 2018 11:00 AM IST (Updated: 15 March 2018 10:50 AM IST)
t-max-icont-min-icon

வாழ்வதற்கு தகுதி இல்லாத கோழைகளின் ஆயுதமே தற்கொலை. அதை விட கோழைத்தனம், தற்கொலை மிரட்டல் விடுப்பது. ஆனால் இதையெல்லாம் மறந்து விட்டு, தற்கொலை மிரட்டலில் பலர் ஈடுபடுவது வேடிக்கையாகி விட்டது.

நல்லதோ, கெட்டதோ எப்படியாவது தனது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற மனநிலையையே தற்கொலை மிரட்டல் விடுப்பதற்கு முக்கிய காரணம். இன்றைய சூழலில், கலெக்டர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் நடக்கிற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தற்கொலை மிரட்டல் விடுப்பதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு அரசு அதிகாரிகளுக்கு உள்ளது.

இதேபோல் செல்போன் கோபுரம், மின்விளக்கு கோபுரம், அடுக்குமாடி கட்டிடம் போன்ற உயரமான இடங்களில் ஏறி நின்று சிலர் தற்கொலை மிரட்டல் விடுப்பார்கள். இதுபோன்ற நபர்களை கீழே இறக்குவதற்குள் போலீசாரும், தீயணைப்பு படையினரும் கடும் சிரமம் அடைந்து விடுகின்றனர். தங்களது படிப்பு, பதவி உள்ளிட்டவைகளை மறந்து உயர் அதிகாரிகள் அந்த நபரிடம் கெஞ்சும் நிலையை பார்க்கும் போது பரிதாபமாகவே உள்ளது. தற்கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள், கீழே இறங்கி வந்தவுடன் மறப்போம், மன்னிப்போம் என்று அவர்களை விட்டு விடுகின்றனர். அதுமட்டுமின்றி எதற்காக அந்த நபர், தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்று ஆராய்ந்து அதனை தீர்க்க அதிகாரிகள் முன்வருகின்றனர். இதனால் தற்கொலை மிரட்டல் விடுத்தால் நல்லதோ? கெட்டதோ? தங்களின் கோரிக்கை நிறைவேறும் என்ற மனநிலை ஏற்படுகிறது. இதுவே, நாளுக்கு நாள் தற்கொலை மிரட்டல் அதிகரிப்பதற்கு காரணமாகி விடுகிறது.

சமீபத்தில், கும்பகோணத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவருக்கு வேறு வழிதடத்தில் மாற்றுப்பணி ஒதுக்கப்பட்டது. இதற்காக அவர், அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் உள்ள மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பதறிப்போன அதிகாரிகள், அங்கு வந்து அவரிடம் மன்னிப்பு கேட்டனர். அதன்பிறகே அவர் கீழே இறங்கி வந்தார். இதுபோன்ற சம்பவத்தை பார்க்கும் சிலருக்கு, நாமும் தற்கொலை மிரட்டல் விடுத்தால் என்ன? என்ற எண்ணம் ஏற்படுகிறது. எனவே தற்கொலை மிரட்டல் விடுப்போர் மீது தயவு தாட்சணியம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தாமிரன்

Next Story