கைரேகை அற்புதங்கள் : இன்பமான வாழ்க்கை யாருக்கு?


கைரேகை அற்புதங்கள் : இன்பமான  வாழ்க்கை யாருக்கு?
x
தினத்தந்தி 16 March 2018 9:00 AM IST (Updated: 15 March 2018 2:57 PM IST)
t-max-icont-min-icon

பூமிக்கு அருகே இருக்கும் கிரகம் சந்திரன். ஒருவரது ஜாதகத்தில் சந்திரனின் பலம் கெட்டால், அவருக்கு மன அமைதி கெடும்.

 ஜாதகத்தில் சந்திரன் பலம் மிக்கவராக அமைந்தால், அந்த வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்வாள். பவுர்ணமி அன்று திருப்பதியில் பிரார்த்தனை செய்ய, சந்திரனது அருளைப் பெற முடியும். பெண்கள் ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால், சோமவார விரதம் அனுஷ்டிப்பது நல்லது. சந்திரனுடன் ராகு–கேது சேர்ந்து இருந்தாலோ அல்லது சந்திரனை இந்தக் கிரகங்கள் பார்வை செய்தாலோ மனநல பாதிப்பு உண்டாக வாய்ப்பு உண்டு.

சந்திரன் பலமாக அமைந்த நபர் ஒரு விவசாயியாக இருந்தால், அந்த நபர் அவரது தசா காலத்தில் கரும்பு பயிர் மூலம் அமோக விளைச்சலையும், அதன் மூலம் அதிக பொருளும் ஈட்டுவார். சந்திரனை செவ்வாய் பார்க்கும் காலத்தில் வறுமை ஏற்படும். சந்திரன் நீச்சமாக ஜாதகத்தில் அமைந்திருந்தால், அந்த நபருக்கு காது மந்தமாக இருக்கும். ஒருவருக்கு கடகம் லக்னமாகி, லக்னாதிபதியான சந்திரன் கடக ராசியிலேயே பலம் பெற்று இருந்தால், அந்த ஜாதகருக்கு மறு பிறவியும் மானிடப் பிறவியாகத் தான் அமையும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. சந்திரனை சுக்ரன் பார்வை செய்ய அந்த ஜாதகர், தாம்பத்ய வி‌ஷயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பார். ஒருவரது லக்னத்துக்கு 6–ம் வீட்டில் சந்திரன் அமைந்த ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. இவ்விதி ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். ஒரு பெண்ணுக்கு 9–ம் வீட்டுக்குரிய சந்திரன், 6–ம் வீட்டில் மறைவு பெற்றிருந்தால் அந்த பெண், இளம் வயதிலேயே கணவனை இழக்க வாய்ப்பு உண்டு. சந்திரனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால், அதை ‘சந்திர மங்கல யோகம்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆனால் அந்த ஜாதகர் சம்பாதிக்கும் பொருள் மாறுபட்ட விதத்தில் இருக்கும் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7–ம் வீடான களத்திர ஸ்தானத்தில் சந்திரன், சூரியன் சேர்க்கை பெற்றிருந்தால், அந்தப் பெண்கள் இல்லற வாழ்க்கையில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். பொதுவாக 7–ம் வீட்டில் சந்திரன் இருந்தால் அந்த ஜாதகருக்கு தாய்வழி உறவில் திருமணம் நடக்க இடமுண்டு. ஒரு ஆணின் ஜாதகத்தில் 9–ம் வீட்டில் சந்திரன் நீச்சமாக அமைந்திருக்க, நவாம்சத்திலும் சந்திரன் நீச்சமாக இருந்து, அதனோடு பாப கிரகங்கள் சேர்ந்திருக்குமானால் அந்த ஜாதகர் தன்னைவிட அதிக வயதுள்ள பெண்ணுடன் சேர்ந்து வாழ்வார். லக்னத்துக்கு 10–ம் வீட்டில் சந்திரன் பலமாக அமைந்திருந்தால், அந்த நபருக்கு வேலைவாய்ப்பு கூடுதலாக அமையும். சந்திரனுடன் சுக்ரன் 11–ம் வீட்டில் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகருக்கு வாகன யோகம் உண்டு. ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் தான் இன்பம் வந்து சேரும்.

இனி கைரேகை மூலம் இன்பமான வாழ்வு யாருக்கு என்பதைப் பார்க்கலாம். கையில் சுக்ர மேட்டின் எதிர்புறம் இருப்பது தான் சந்திர மேடு. இந்த சந்திர மேடு மிகவும் உப்பலாக மேல் நோக்கி இருந்தால், அந்த ஜாதகர் எப்போதும் அதிக சிந்தனையுடன் இருப்பார். சந்திர மேடு ரோஜா நிறத்தில் அமைந்திருப்பது நல்லது. மாறாக சந்திர மேடு நீல நிறத்தில் அமைந்திருந்தால் அது இருதயம் பலவீனம் என்பதை தெரிவிக்கும் அறிகுறியாகும். அந்த நபருக்கு இருதய சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சந்திர மேடு பலமின்றி அமுங்கி தட்டையாக அமைந் திருந்தால், முன்புத்தி, பின்புத்தி இருக்க வாய்ப்பில்லை. சந்திர மேடு பலமாக அமைந்தவருக்கு பெண் தெய்வ வழிபாடு செய்வதில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். அந்த நபருக்கு பராசக்தியின் அருள் கிடைக்கும். சந்திர மேட்டில் நட்சத்திரக் குறி, சிறு வயதில் ஏற்பட்ட தண்ணீர் கண்டத்தை தெரிவிக்கும் அறிகுறியாகும். சந்திர மேட்டில் கிராஸ் குறி இருப்பவர்களுக்கு, தண்ணீரில் மூழ்கி மரணிக்க வாய்ப்புண்டு. இந்த குறி இருப்பவர்கள் கடல், பெரிய தடாகங்கள், ஆறுகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது. சந்திர மேட்டில் வட்டம், கருப்பு அடையாளம், மச்சம் இருந்தாலும் தண்ணீர் கண்டம் ஏற்பட இடமுண்டு.

- கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.

Next Story