உளுந்தூர்பேட்டை அருகே 9 ஆசிரியர்கள் இடமாற்றம்: பள்ளிக்கூடத்தை சூறையாடிய மாணவர்கள்


உளுந்தூர்பேட்டை அருகே 9 ஆசிரியர்கள் இடமாற்றம்: பள்ளிக்கூடத்தை சூறையாடிய மாணவர்கள்
x
தினத்தந்தி 15 March 2018 10:00 PM GMT (Updated: 15 March 2018 5:39 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே 9 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் பள்ளிக்கூடத்தை மாணவர்கள் சூறையாடினர். மேலும் புத்தகங்கள், வரைபடங்களை கிழித்து தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே செம்மனந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 9 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கூடத்தில் பணியாற்றிய ஒரு ஆசிரியை, மாணவர்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாகவும், அந்த ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரியும் மாணவர்களின் பெற்றோர்களில் ஒரு தரப்பினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக் கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரி திருநாவலூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் செல்வராஜிடம் புகார் கொடுத்தனர். இதனிடையே செம்மனந்தல் கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் பள்ளி தலைமை ஆசிரியரால் தான், பல்வேறு குழப்பங்கள் நடைபெற்று வருகிறது. எனவே அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் செல்வராஜிடம் புகார் கொடுத்தனர். இவ்வாறு ஆசிரியர்கள் மீது மாணவர்களின் பெற்றோர்கள் போட்டி புகார் கொடுத்ததால், இதன் உண்மை நிலை பற்றி விசாரிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி விழுப்புரம் மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அதிகாரி சிவமதிவாணன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினார். இதையடுத்து தலைமை ஆசிரியர் உள்பட 9 ஆசிரியர்களையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் சிலர் நேற்று காலை பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் அங்கிருந்த மாணவர்களிடம், நாங்கள் இந்த பள்ளிக்கூடத்துக்கு இனி வரமாட்டோம் என்று அழுதபடி கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

ஆசிரியர்கள் அழுது கொண்டே செல்வதை பார்த்த பெற்றோர், இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் இந்த பள்ளிக்கு வரும் வரை நீங்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்ல வேண்டாம் என்று அந்த பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பள்ளிக்கூடம் முன்பு கெடிலம்- பரிக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சில மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து வகுப்பறையில் இருந்த மேஜைகள், நாற்காலிகள், மின்விசிறி மற்றும் வரைபடங்கள், புத்தகம் ஆகியவற்றை எடுத்து வந்து சாலையின் நடுவில் வீசி எறிந்தனர். பின்னர் கட்டையால் மேஜைகள், நாற்காலிகள், மின்விசிறி ஆகியவற்றை உடைத்ததோடு, அதன் மேல் ஏறி நின்று கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து வரைபடம், புத்தகங்களை கிழித்து தீ வைத்து எரித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சாலையில் போடப்பட்டிருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர்.

ஆனால் மாணவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே போலீசார் அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களின் பெற்றோரை விரட்டியடித்தனர். இதுகுறித்து அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை தாசில்தார் பாலசுப்பிரமணியன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள், மாணவர்களை சமாதானப்படுத்தி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அந்த பள்ளிக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடைபெற்றன. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர்களை சிலர் தூண்டிவிட்டதன் காரணமாகவே அவர்கள், பள்ளியை சூறையாடியது தெரிந்தது.

அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புக்காக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளிக்கூடத்துக்கு வந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Next Story