திருக்கோவிலூர் அருகே கல்லூரி ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் நகைகள் கொள்ளை
திருக்கோவிலூர் அருகே கல்லூரி ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள சடக்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி ரெஜினா (வயது 48). இவர்களுக்கு எட்வின்ராஜ்(26) என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். செல்வம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
எட்வின்ராஜ் சென்னையில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். திவ்யா, சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். ரெஜினா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரெஜினா சாப்பிட்டு முடித்ததும், வீட்டின் பின்பக்க கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு ஒரு அறையில் படுத்து தூங்கினார். பின்னர் நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது.
வீட்டின் மற்றொரு அறையில் இருந்த பீரோ திறந்திருந்த நிலையில், அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது வீட்டின் பின்பக்க தோட்டத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் வீட்டின் பத்திரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் நீரில் மூழ்கியபடி கிடந்தது. இதையடுத்து அதனை ரெஜினா எடுத்து, வெயிலில் காய வைத்தார்.
மேலும் விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டை மோப்பமிட்டபடி சென்ற அந்த நாய், வீட்டின் பின்பக்கம் உள்ள வாய்க்கால் வழியாக திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலை வரை சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து, வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் மர்மநபர்கள் ரெஜினா வீட்டின் பின்பக்கம் வந்துள்ளனர். அவர்கள் பின்பக்க கதவின் தாழ்ப்பாளை சிறிய கம்பியால் நெம்பி திறந்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் புகுந்து, பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகளையும், ரூ.5 ஆயிரத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.
மேலும் வீட்டின் பத்திரம் மற்றும் முக்கிய ஆவணங்களை தண்ணீர் தொட்டியில் வீசிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து ரெஜினா கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story