வனப்பகுதியில் பரவும் காட்டுத்தீயை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


வனப்பகுதியில் பரவும் காட்டுத்தீயை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 16 March 2018 4:00 AM IST (Updated: 16 March 2018 12:11 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் வனப்பகுதியில் பரவும் காட்டுத்தீயை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? வனப்பணியாளர்கள் பற்றாக்குறையால் கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கூடலூர்,

கூடலூர் வன கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, நாடுகாணி ஜீன்பூல் தாவரவியல் மையம், தேவாலா, சேரம்பாடி, பிதிர்காடு வனச்சரகங்கள் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வன நிலம் 2,538 ஹெக்டேர் மற்றும் வனமாக அறிவிக்கப்பட்ட நிலம் 9,120 ஹெக்டேர் உள்ளது. இதுதவிர முடிவு செய்யப்படாத பிரிவு-17-ன் கீழ் உள்ள நிலங்களிலும் வனம் உள்ளது. ரோஸ்வுட், சந்தனம், தேக்கு, அகில், ஓமம் உள்பட விலை உயர்ந்த மரங்கள் வனத்தில் உள்ளது. இதுதவிர காட்டு யானைகள், புலிகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தை புலிகள், ராஜ நாகம் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவு வசிக்கின்றன. மேலும் கூடலூர் கோக்கால் மலை, நாடுகாணி, தேவாலா, தாவரவியல் மைய வனம் உள்ளிட்ட இடங்களில் புல்வெளிகளும் உள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை பனிப்பொலிவு மற்றும் கோடை காலநிலை நிலவுவதால் வனங்களில் வறட்சியும், புற்களும் காய்ந்து விடுகின்றன.

இந்த நேரத்தில் சமூக விரோதிகள் கூடலூர் பகுதியில் உள்ள வனங்களுக்கு தீ வைத்து விடுகின்றனர். காட்டுத்தீயால் வனம் மற்றும் புல்வெளிகள் தீக்கிரையாகி வருகிறது. இதில் சிறு வன உயிரினங்களான பாம்பு, முயல்கள், பறவை இனங்கள் கருகி விடுகின்றன. மேலும் அரிய வகை தாவரங்கள், மூலிகைகள் நாசமாகிறது. தகவல் அறிந்து வன ஊழியர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் வனப்பணியாளர்கள் பற்றாக்குறையால் அடிக்கடி தீ பிடிக்கும் சம்பவங்களை கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. வனங்களில் சில வேளைகளில் பற்றி பரவுகின்ற தீயின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத நிலை வன ஊழியர்களுக்கு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வனத்தில் காட்டுத்தீ பரவினால் அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக மற்றும் வருவாய் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வனத்துறையினருடன் இணைந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனால் அந்த உத்தரவு இன்று வரை நடைமுறைப்படுத்த வில்லை. இதனிடையே தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து வனத்தில் காட்டுத்தீ பிடிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வருவாய், வனத்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் கோடை காலம் முடியும் வரை வனத்துக்குள் யாரையும் அனுமதிக்க கூடாது என எச்சரித்துள்ளது.

கூடலூர் வனப்பகுதியும் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

கூடலூர் வன கோட்டத்தில் மலை ஏற்ற பயிற்சி நடைபெறுவதும் இல்லை. காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் அனுமதி வழங்குவது இல்லை. இருப்பினும் குரங்கணி விபத்து சம்பவத்தை தொடர்ந்து கூடலூர் வனத்தில் காட்டுத்தீ பரவாமல் இருக்க உஷார் படுத்தப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதிக்கு தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வன ஊழியர்கள் விழிப்புடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனிடையே வன ஊழியர்கள் தரப்பில் கூறும்போது, கூடலூர் கோட்டத்தில் வன ஊழியர்கள் பணியிடங்கள் காலியாகவே கிடக்கிறது. வனச்சரகர், 15 வன காப்பாளர் பணியிடங்கள் சில ஆண்டுகளாக நிரப்பப்பட வில்லை. குறைந்த அளவு ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதால் பணிச்சுமை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கூடலூர் பகுதியில் காட்டு யானைகளை விரட்டும் பணியை ஆண்டு முழுவதும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர வனத்துக்குள் சென்று கண்காணிக்க வேண்டிய பணி உள்ளது. எனவே காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் அதிகமாக இருப்பதால் வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சி செல்ல அனுமதிப்பதில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே மலையேற்ற பயிற்சி செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கோடை காலங்களில் காட்டுத்தீ அபாயம் காரணமாக அனுமதி அளிப்பதில்லை. தற்போதும் அதேபோல் மலையேற்ற பயிற்சி செல்லவோ அல்லது வனப்பகுதிக்குள் நடந்து செல்லவோ அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் குரங்கணி சம்பவத்தை அடுத்து நீலகிரி வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு முற்றிலும் தடை செய்யுமாறு அந்தந்த வன அலுவலர்களுக்கு கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்ரமணியம் உத்தரவிட்டு உள்ளார்.

Next Story