பவானிசாகர் அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்
பவானிசாகர் அருகே தோட்டத்தில் புகுந்த யானைகள் வாழைகளை நாசப்படுத்தின.
பவானிசாகர்,
பவானிசாகர் வனப்பகுதியில் புலி, யானை, மான், சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் வனவிலங்குகள் அனைத்தும் உணவு மற்றும் தண்ணீரை தேடி பவானிசாகர் அருகே உள்ள கிராமப்பகுதிகளில் புகுந்து விடுகின்றன. மேலும் தோட்டங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு இருக்கும் கரும்பு, வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்தி வரும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் வெளியேறின. இந்த யானைகள் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி பாரதி (வயது 58) என்பவருடைய வாழைத்தோட்டத்துக்குள் புகுந்தன. தற்போது அந்த தோட்டத்தில் 1000 வாழைகள் பயிரிடப்பட்டு உள்ளன.
தோட்டத்தில் 2 யானைகளும் பிளிறியபடி வாழைகளை தின்று கொண்டு இருந்தன. யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த பாரதி திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் அவர் தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு 2 யானைகள் வாழைகளை பிடுங்கி தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்தி கொண்டு இருந்ததை கண்டார். உடனே இதுகுறித்து அவர் பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அனைவரும் அங்கு ஒன்று திரண்டு, பட்டாசுகள் வெடித்தும், தீப்பந்தம் காட்டியும் யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்றனர்.
ஆனால் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் விவசாயிகளுக்கு அங்கும் இங்குமாக போக்கு காட்டின. மேலும் அவர்களை விரட்டின. இதைத்தொடர்ந்து விவசாயிகள் தகர டப்பாக்கள் மூலம் ஒலி எழுப்பியும், தீப்பந்தம் காட்டியும் யானைகளை காட்டுக்குள் விரட்டினார்கள். சுமார் 1½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு 2 யானைகளும் 2.30 மணி அளவில் வனப்பகுதிக்குள் சென்றன.
பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி யானைகள் வெளியேறி, தோட்டங்களுக்குள் புகுந்து விடுகிறது. பின்னர் அங்கு பயிரிடப்பட்டு உள்ள வாழை, கரும்புகளை நாசப்படுத்துகிறது. இதனால் விவசாயிகளாகிய எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் கிராமங்களுக்குள் புகாதவாறு பெரிய அகழிகள் அமைக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோட்டங்களுக்குள் யானைகள் புகுந்துவிடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story