ராசாப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டி 22 பேர் காயம்


ராசாப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டி 22 பேர் காயம்
x
தினத்தந்தி 16 March 2018 4:15 AM IST (Updated: 16 March 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

கந்தர்வகோட்டை அருகே உள்ள ராசாப்பட்டியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 22 பேர் காயமடைந்தனர்.

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ராசாப்பட்டியில் உள்ள மாசிமலைக்கருப்பர் கோவில், பட்டவன், பிடாரி அம்மன் ஆகிய கோவில்களின் திருவிழாவை முன்னிட்டு, கிராம மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் கணேஷ் நேற்று முன்தினம் ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டை கலெக்டர் கணேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த 715 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன. காளைகளை 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் பல காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை முட்டித் தள்ளியும், கீழே தள்ளி மிதித்து விட்டும் ஓடின.

இதில் காளைகள் முட்டியதில் ஜெயராமன், மணிகண்டன், ராஜ்குமார், சண்முகசுந்தரம் உள்பட 22 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் தயார்நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ, குக்கர், வெள்ளி நாணயம், குத்துவிளக்கு உள்பட பல்வேறு பரிசு பொருட் கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை உதவி கலெக்டர் கே.எம்.சரயு, கந்தர்வகோட்டை தாசில்தார் பொன்மலர் மற்றும் ராசாப்பட்டி, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

ஜல்லிக்கட்டை முன்னிட்டு கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, சங்கீதா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அனைத்து காளைகளையும் கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்த பின்னரே அனுமதித்தனர். இதேபோல மாடுபிடி வீரர்களையும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியும் எடுத்து கொண்டனர்.


Next Story