மழலையர், தொடக்கப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு


மழலையர், தொடக்கப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 16 March 2018 4:30 AM IST (Updated: 16 March 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

மழலையர், தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளிகள் சங்க நிர்வாகிகள் கலெக்டர் அன்பழகனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கரூர்,

தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக், உயர்நிலை, மேல்நிலை, சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் சங்க மாநில தலைவர் பி.ராஜீ, செயலாளர் முகமது ஹாசால்ஹக், துணை தலைவர்கள் கே.எஸ்.வி. பள்ளி ராஜகோபால், கருணாகரன் மற்றும் சங்க நிர்வாகிகள் நேற்று கரூர் கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:-

ஆர்.டி.இ. சட்டப்படி தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை செய்யப்படும் மாணவர்களுக்கு உண்டான கல்வி கட்டணத்தை அரசு சட்டத்தில் உள்ளது போல அந்த கல்வியாண்டிலேயே பாக்கியில்லாமல் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு தந்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த முடியும்.

குஜராத் மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது போல கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். கடந்த 2007-ம் ஆண்டு வரை எல்.பி.ஏ. பள்ளி கட்டிட அனுமதி தேவையில்லை என்ற அரசாணையை கடந்த 2017-ம் ஆண்டு வரை விலக்கு அளித்து புதிதாக ஆரம்பிக்கும் பள்ளிகளுக்கு மட்டும் எல்.பி.ஏ. அனுமதி பெற வேண்டும். 10 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் என்பதை மாற்றி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் என மாற்றம் செய்து வழங்க வேண்டும்.

தற்போது செயல்பட்டு கொண்டு இருக்கும் மழலையர், தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். தனியார் பள்ளி நிர்வாக தலைமை ஆசிரிய- ஆசிரியைகள் பணியாளர்களிடம் மனிதாபிமான முறைப்படி நடந்து கொள்ளவேண்டும். பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமும், தலைமை ஆசிரியையுமே பொறுப்பானவர்கள். அவர்களை அடிக்கடி கூட்டம் என்ற பெயரில் அலுவலகத்திற்கு அழைப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டு, பெற்றோர்கள் மற்றும் பொது நலப்பிரச்சினையாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அன்பழகன் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

Next Story