தமிழக அரசின் பட்ஜெட் வணிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி


தமிழக அரசின் பட்ஜெட் வணிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி
x
தினத்தந்தி 16 March 2018 4:15 AM IST (Updated: 16 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் பட்ஜெட் வணிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.

கரூர்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கரூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் வருகிற மே மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ள இந்திய வணிகர் உரிமை மீட்பு 35-வது மாநில மாநாடு மற்றும் வணிகர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் தலைவர் வக்கீல் கே.ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.எஸ்.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

சென்னையில் வருகிற மே மாதம் 5-ந் தேதி நடைபெறும் வணிகர் தின மாநாட்டில் கரூர் மாவட்டத்தில் இருந்து 100 வாகனங்களில் சுமார் 4 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். கரூர் மாவட்டத்தில் வணிகர்களை அதிக துன்புறுத்தும் வகையில் செஸ் வரி என்ற பெயரில் தனிப்படை அமைத்து அதிகாரிகள் தேவையில்லாத அபராதத்தை விதிக்கின்றனர். இதனை உடனே கைவிட வேண்டும்.

தமிழகத்தில் விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் என்பது பொதுமக்களுக்கும், கூட்டுறவு அமைப்பிற்கும் நன்மை பயக்கும் அமைப்பாக அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று அரசியல் தலையீடுகளால் கூட்டுறவு சங்கங்கள் கேள்விக்குறியாக உள்ளன. எனவே சங்க தேர்தல் நடக்கும்போது அரசியல் கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உண்மையாக நடந்து பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்பட வேண்டும். மத்திய அரசு இ-வே பில் என்ற பில்லை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. இதனை வணிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

சேவை மற்றும் சரக்கு வரி கொள்கையால் மாநில அரசின் உரிமை முழுமையாக பறிக்கப்பட்டு உள்ளது. முன்பு ஒருவரி குறைக்க வேண்டும் என்றால் மாநில நிதி அமைச்சர் மற்றும் நிதித்துறை செயலாளர்களை தொடர்பு கொண்டு கோரிக்கைகளை வைக்கலாம். ஆனால் இன்று எந்த வரி சம்பந்தமான பிரச்சினை என்றாலும் மத்திய அரசை தொடர்பு கொள்ளும் நிலை உள்ளது. மத்திய நிதி மந்திரி ஒரே நாடு, ஒரே நிதிக்கொள்கை, ஒரே வரி விதிப்பு என்று கூறினார்.

ஆனால் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் பல முரண்பாடுகள் உள்ளன. சேவை மற்றும் சரக்கு வரி கொள்கையானது 5 முதல் 12 சதவீதம் வரை மட்டும் இருக்க வேண்டும். தற்போது 28 சதவீதம் என்பதை அரசு உடனே குறைக்க வேண்டும். இவ்வாறு அதிகப்படுத்தினால் வரி ஏய்ப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். சேவை மற்றும் சரக்கு வரி கட்டணத்தில் வணிகர்களுக்கு கிடைக்க வேண்டிய அவுட்புட் காலதாமதம் இன்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை முழுமையாக கொடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விவசாயிகள், அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போராடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் நெல் வணிகர் சங்க மாநில துணை தலைவர் வி.ஆர்.கந்தசாமி, கரூர் மாவட்ட வணிகர் சங்க பொருளாளர் பி.செல்வம், டைஸ் அண்டு கெமிக்கல் சங்க தலைவர் ஜெயந்தி பழனிசாமி, ஆடிட்டர் நல்லுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கரூர் மாவட்ட வர்த்தக சங்க துணை செயலாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.


Next Story