பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி சாவு தோழி படுகாயம்


பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி சாவு தோழி படுகாயம்
x
தினத்தந்தி 16 March 2018 4:15 AM IST (Updated: 16 March 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

பாகலூர் அருகே அரசு டவுன் பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். உடன் சென்ற தோழி படுகாயம் அடைந்தார்.

ஓசூர்,

ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி மேத்ரா. இவர்களின் மகள் மானஷா (வயது 13). இவர் நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தோழி ரக்‌ஷிதா (12). இவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் சொக்கநாதபுரத்தில் இருந்து நல்லூர் பள்ளிக்கு தினமும் அரசு டவுன் பஸ்சில் வருவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று மாலை அவர்கள் 2 பேரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் ஏறினார்கள். சொக்கநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து மாணவிகள் 2 பேரும் இறங்கினார்கள். அப்போது எதிரே ஒரு லாரி வந்தது. இதனால் லாரிக்கு வழி விடுவதற்காக டிரைவர் பஸ்சை பின்நோக்கி எடுத்தார். அந்த நேரம் பஸ் மாணவிகள் மீது மோதியது. இதில் மாணவி மானஷா பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார். மாணவி ரக்‌ஷிதா படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான மாணவி மானஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த மாணவி ரக்‌ஷிதாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story