தங்கத்துக்கு பதில் கவரிங் நகைகளை வைத்து மூதாட்டியிடம் 7 பவுன் நகைகள் திருட்டு நர்சு கைது


தங்கத்துக்கு பதில் கவரிங் நகைகளை வைத்து மூதாட்டியிடம் 7 பவுன் நகைகள் திருட்டு நர்சு கைது
x
தினத்தந்தி 16 March 2018 3:30 AM IST (Updated: 16 March 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

தங்கத்துக்கு பதில் கவரிங் நகைகளை வைத்து மூதாட்டியை ஏமாற்றி 7 பவுன் தங்கநகையை திருடிய நர்சை 2 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

சென்னை, 

சென்னை அசோக்நகர் 11-வது அவென்யூவில் வசிப்பவர் விஜயலட்சுமி (வயது 83). சர்க்கரை நோயாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ரேவதி (27). நர்சான இவர், தினமும் விஜயலட்சுமி வீட்டிற்கு வந்து மருந்து, மாத்திரைகள் கொடுத்து அவரை நன்றாக கவனித்து கொள்வார். மேலும் மசாஜ் செய்து விடுவார். சர்க்கரை நோய்க்காக இன்சுலின் ஊசியும் போட்டுவிடுவார்.

இதனால் நர்சு ரேவதியை தனது மகளை போல விஜயலட்சுமி பாவித்து வந்தார். ரேவதி மசாஜ் செய்யும்போது, விஜயலட்சுமி தான் அணிந்திருக்கும் 7 பவுன் தங்கநகைகளை கழற்றி தலையணைக்கு அடியில் வைப்பது வழக்கம். மசாஜ் முடிந்தபிறகு அந்த நகைகளை மீண்டும் போட்டுக் கொள்வார்.

நகை திருட்டு

இவ்வாறு நகைகளை கழற்றி தலையணைக்கு அடியில் வைப்பது நர்சு ரேவதிக்கு மட்டுமே தெரியும். அவர் அந்த நகைகளை அபகரிக்க திட்டம் போட்டார். கவரிங் நகைகளை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு, உண்மையான நகைகளை ரேவதி நைசாக திருடிச் சென்றுவிட்டார்.

நகைகளை திருடிச்சென்றுவிட்டு, கவரிங் நகைகளை வைத்தது யார்? என்பது பற்றி கண்டுபிடித்து தரும்படி குமரன்நகர் போலீசில் விஜயலட்சுமி புகார் கொடுத்தார். கடந்த ஜனவரி மாதம் இந்த சம்பவம் நடந்தது.

குமரன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். நகைகளை திருடியது ரேவதி என்பதை நேற்று முன்தினம் போலீசார் கண்டுபிடித்தனர். 2 மாதங்களுக்கு பின்னர் ரேவதி கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டது. 

Next Story