மதுரை ரெயில் நிலையத்தில் 27 புகையிலை பண்டல்கள் பிடிபட்டன


மதுரை ரெயில் நிலையத்தில் 27 புகையிலை பண்டல்கள் பிடிபட்டன
x
தினத்தந்தி 16 March 2018 4:30 AM IST (Updated: 16 March 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ரெயில் நிலையத்தில் 27 புகையிலை பண்டல்கள் கைப்பற்றப்பட்டன. அவை உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மதுரை,

டெல்லியில் இருந்து கன்னியாகுமரிக்கு வாரந்தோறும் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் திருக்குறள் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. அதில் குத்தகை அடிப்படையில் ஒரு சரக்கு பெட்டி இணைக்கப்பட்டு உள்ளது. இந்த பெட்டியை கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் முன்னிலையில் மட்டுமே திறக்க வேண்டும். இடையில் நிற்கும் மற்ற ரெயில் நிலையங்களில் சரக்கு பெட்டியை திறக்க கூடாது. ஆனால் இந்த விதியை மீறி, மதுரை ரெயில் நிலையத்தில் சரக்கு பெட்டி திறக்கப்பட்டு அதில் இருந்து சரக்குகள் இறக்குவதாகவும், அதனால் மதுரையில் 5 நிமிடம் மட்டுமே நிற்க வேண்டிய திருக்குறள் எக்ஸ்பிரஸ் 10 நிமிடத்திற்கு மேல் நிறுத்தப்படுவதாகவும் ரெயில்வே லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சாதாரண உடையில் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் போல் வந்தனர். அப்போது மதுரையில் இந்த ரெயில் நிற்கும் போது, சரக்கு பெட்டி திறக்கப்பட்டு அதில் இருந்து 27 பண்டல்கள் கீழே இறக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக அந்த பண்டல்களை கைப்பற்றி, சரக்குகளை கீழே இறக்கிய நபர்களையும் பிடித்தனர். பின்னர் அவர்களை மதுரையில் ரெயில்வே கோட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து மதுரை ரெயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டு வருவது தெரியவந்தது. மேலும் ரெயிலில் இருந்து இறக்கப்பட்ட 27 பண்டல்களிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன.

இந்த நிலையில் நேற்று இந்த 27 புகையிலை பண்டல்களை மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம் தலைமையிலான அலுவலர்களிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர். இந்த புகையிலை பாக்கெட்டுகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story