காட்டுத்தீ விபத்து: உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு


காட்டுத்தீ விபத்து: உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
x
தினத்தந்தி 16 March 2018 5:45 AM IST (Updated: 16 March 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 15-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த தீக்காயம் அடைந்து மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

மதுரை,

தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்காக சென்றிருந்த சென்னை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 36 பேர் சிக்கித் தவித்தனர். அவர்களில் சம்பவ இடத்திலேயே 9 பேர் கருகி இறந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த தீக்காயம் அடைந்து மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் சென்னையைச் சேர்ந்த நிஷா, ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த திவ்யா, கோவை மாவட்டம் கிணத்துக்கடவைச்சேர்ந்த திவ்யா விஸ்வநாதன் ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் இறந்து போனார்கள். மீதமுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த கிரி மகன் கண்ணன் (வயது26) என்பவர் நேற்று மாலை பரிதாபமாக இறந்துபோனார்.

அடுத்து சிறிது நேரத்தில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த சென்னையை சேர்ந்த முத்துமாலை என்பவர் மகள் அனுவித்யாவும் (25) உயிர் இழந்தார். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே, சென்னையில் இருந்து மதுரை வந்த சிறப்பு மருத்துவக் குழுவினர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தேவி, சிவசங்கரி ஆகியோருடைய உறவினர்களிடம் அவர்களுக்கு வழங்க இருக்கிற சிறப்பு சிகிச்சை பற்றிய விளக்கத்தை எடுத்துரைத்தனர்.

இதுகுறித்து டாக்டர்கள் ஜெயராமன், ஏஞ்சலின், சுதா ஆகியோர் கூறுகையில், “சென்னையில் இருந்து சிறப்பு குழுவாக இங்கே வந்து நாங்கள் சிகிச்சை மேற்கொள்கிறோம். சிகிச்சையில் இருக்கும் அனைவருமே ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். தீக்காயத்தின் அளவு மாறாது. தீக்காயம் ஏற்பட்டு சில நாட்கள் ஆன நிலையில் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 100 சதவீதம் காப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறோம்“ என்றனர்.

மதுரையில் நேற்று உயிர் இழந்த கண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை. இவர் 70 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணனின் தந்தை கிரி இறந்துவிட்டார். தாயார் வசந்தா வீட்டு வாசலில் டீக்கடை நடத்தி, மகனை படிக்க வைத்தார்.

கண்ணன், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தார். 6 மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

காட்டுத்தீ சூழ்ந்தபோது, அதன் விபரீதம் தெரியாமல் கண்ணன் அங்கே நின்று செல்பி எடுத்து இருக்கிறார். பின்பு அதன் வேகம் கண்டு அஞ்சி, தன்னுடன் வந்த நண்பர்களான விவேக்-திவ்யா தம்பதியர், தமிழ்ச்செல்வன் ஆகியோரை காப்பாற்ற முயன்று இருக்கிறார். ஆனால் அதற்குள் மின்னல் வேகத்தில் பரவிய நெருப்பின் கோரப் பிடியில் கண்ணன் உள்ளிட்ட நண்பர்கள் சிக்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story