நாளுக்குநாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்


நாளுக்குநாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 16 March 2018 3:29 AM IST (Updated: 16 March 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை நகரில் மரக்கடை வீதி, தாயமங்கலம் ரோடு, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

மானாமதுரை,

மானாமதுரை நகரை மேல்கரை, கீழ்கரை என்று வைகை ஆறு இரண்டாக பிரிக்கிறது. இரண்டு பகுதிகளிலும் வங்கிகள், போலீஸ் நிலையம், கோர்ட்டு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மானாமதுரையைச் சுற்றியுள்ள 39 ஊராட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் தங்களது தேவைகளுக்காக தினசரி மானாமதுரைக்கு வந்து செல்கின்றனர். மானாமதுரை மரக்கடை வீதி, அண்ணாசிலை, தேவர் சிலை, தாயமங்கலம் ரோடு, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவதற்காக சுற்றுவட்டார வியாபாரிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். பலரும் பொருட்களை ஆர்டர் செய்துவிட்டு, அவற்றை லாரிகளில் பேக்கிங் செய்து கொண்டு செல்கிறார்கள். மேலும் இந்த வர்த்தக நிறுவனங்களுக்கு சரக்கு லாரிகள் மூலம் பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன.


அவ்வாறு பொருட்களை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் வருகிற கனரக வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி பொருட்களை இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். வேலை நேரமான காலை மற்றும் மாலை வேளைகளில் சரக்கு வாகனங்களை சாலையில் நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்க தடை உள்ளது. ஆனால் அதனை மீறி பலரும் சாலையின் மத்தியில் வாகனங்களை நிறுத்துகின்றனர். ஏற்கனவே மரக்கடை வீதி, தாயமங்கலம் ரோடு உள்ளிட்ட சாலைகள் குறுகிய நிலையில் காணப்படுகிறது. அதிலும் லாரிகளை நிறுத்துவதால் தற்போது நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அப்போது பள்ளி-கல்லூரி, வேலைக்கு செல்வோர் மிகுந்த அவதியடைய வேண்டியுள்ளது. எனவே நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story