தேவாரம்-கோம்பை பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
தேவாரம்-கோம்பை பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
தேவாரம்,
தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் காட்டுயானைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. குறிப்பாக அடர்ந்த வனப்பகுதியான தேவாரம்-கோம்பையில் உள்ள 18-ம்படி, சதுரங்கப்பாறை, சாக்குலூத்து, காப்புகாடு உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சுற்றித்திரிகின்றன.
இவை, மலை அடிவார பகுதியில் உள்ள விளைநிலங் களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அங்கு, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, கம்பு, தக்காளி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்கின்றன. சமீபகாலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே யானைகளை விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, தேவாரம் முதல் கோம்பை வரை யானைகள் வருவதை தடுக்க மலையடிவாரத்தை ஒட்டி சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு அகழிகள் வெட்டப்பட்டன. இதனால் விவசாயிகளுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனெனில், மலையடிவாரத்தில் உள்ள சில இடங்களில் பாறைகளை வெட்டி முழுமையாக அகழி அமைக்கவில்லை. காட்டுயானைகள் அதிகம் வாழும் தேவாரம் வனப்பகுதியில் நிரந்தரமாக நன்கு பயிற்சி பெற்ற வனத்துறை அதிகாரிகளை பணி அமர்த்தவேண்டும். மேலும் விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் வருவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story