அடுத்து வரும் தேர்தல்களில் சிவசேனா தனித்து போட்டியிடும் மந்திரி ராம்தாஸ் கதம் பேட்டி


அடுத்து வரும் தேர்தல்களில் சிவசேனா தனித்து போட்டியிடும் மந்திரி ராம்தாஸ் கதம் பேட்டி
x
தினத்தந்தி 16 March 2018 4:15 AM IST (Updated: 16 March 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

அடுத்து வரும் தேர்தல்களில் சிவசேனா கட்சி தனித்தே போட்டியிடும் என மந்திரி ராம்தாஸ் கதம் கூறினார்.

மும்பை,

அடுத்து வரும் தேர்தல்களில் சிவசேனா கட்சி தனித்தே போட்டியிடும் என மந்திரி ராம்தாஸ் கதம் கூறினார்.

ஆளும் கூட்டணி

மராட்டியத்தில் பா.ஜனதா-சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சிவசேனா ஆளும் கூட்டணியில் இருந்தாலும் மாநிலத்தின் பல்வேறு பிரச்சினைகளில் பா.ஜனதாவுடன் முரண்பட்டு பலமுறை வெளிப்படையாகவே தனது எதிர்ப்பை காட்டி வந்தது.

இதற்கிடையே நேற்று முன்தினம் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய மராட்டிய நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார்(பா.ஜனதா), மக்களின் நன்மைக்காக வருகிற தேர்தலிலும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி தொடரும் என கூறினார். இந்த நிலையில் நேற்று நிருபர்களை சந்தித்து பேசிய, சிவசேனா கட்சியை சேர்ந்த சுற்றுச்சூழல் துறை மந்திரி ராம்தாஸ் கதம், இனிவரும் தேர்தல்களில் சிவசேனா தனித்து போட்டியிடும் என தெரிவித்தார்.

தனித்து போட்டி


இது குறித்து அவர் கூறியதாவது:-

அடுத்து வரும் தேர்தல்களில், சிவசேனா தனியாக தான் போட்டியிடும் என எங்களது கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளார். முங்கண்டிவார் தனது கருத்தை தெரிவிப்பதற்கு முன்பு அதனை நினைத்து பார்த்திருக்க வேண்டும். மேலும் தேர்தல் கூட்டணி பற்றி சிவசேனா தலைமைதான் முடிவு எடுக்க முடியுமே தவிர பா.ஜனதாவுக்கு இதில் எந்தவொரு அதிகாரமும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் நடந்து முடிந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இது வெறும் ஆரம்பம் தான், முழுவதையும் பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்தார்.

Next Story