‘டி.டி.வி. தினகரனின் புதிய அமைப்பு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


‘டி.டி.வி. தினகரனின் புதிய அமைப்பு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 16 March 2018 3:30 AM IST (Updated: 16 March 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

டி.டி.வி. தினகரன் தொடங்கி உள்ள புதிய அமைப்பு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

வாழப்பாடி, 

பாரதீய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் வாழப்பாடியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

தமிழகத்தில் டி.டி.வி.தினகரன் தொடங்கி உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அமைப்பா?, அணியா? ஒரு பிரிவா? என அவர்களுக்கே ஒரு குழப்பம் இருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்தவித தாக்கத்தையும் தமிழக அரசியலில் ஏற்படுத்தப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் இருந்த கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த இந்த அமைப்பின் பெயரை பயன்படுத்தி கொள்வார்கள்.

டி.டி.வி.தினகரன் தொடங்கிய புதிய அமைப்பு தமிழக மக்களின் நலனுக்காக இல்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற போது இந்த அரசை கவிழ்ப்பேன் என்று சொன்னாரே தவிர ஓட்டுப்போட்ட மக்களுக்கு நல்லது செய்வேன் என்று சொல்லவில்லை. இருக்கும் பணத்தை வைத்து ஒரு கலாட்டாவை காண்பிப்பாரே தவிர வேறு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதுதான் உண்மை.

தமிழக பட்ஜெட்டினை வரவேற்போம். ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு பழக்கம் உள்ளது. சட்டமன்றத்துக்கு போனால் ஒன்று கிழிந்த சட்டையா இருக்கணும்.. இல்லையென்றால் கருப்பு சட்டையாக இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும் எதிர்க்கட்சியாக அவர் செயல்படவில்லை.

இன்றைய சூழ்நிலையில் ஜி.எஸ்.டி.யால் மாநிலங்கள் அதிக அளவில் பயனடைந்துள்ளன என்பதுதான் நிதி அமைச்சரின் கருத்து. இன்று பருப்பு வியாபாரிகள் பலன் அடைந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி. குறித்து அடிப்படை தெரியாமல் தவறாக முன்னிறுத்தப்படுகிறது. இதையெல்லாம் தமிழக மக்களுக்கு பா.ஜனதா எடுத்து சொல்லும். மழைநீர் சேகரிப்பில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

3 நாடாளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்தவுடன் பா.ஜனதாவின் செல்வாக்கு சரிய ஆரம்பித்துள்ளது என்று கூறுபவர்களுக்கு ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். பா.ஜனதா கட்சி ஜெயிக்கும் போது வாக்கு எந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்கு ஓட்டு விழுகிறது என்று எங்களது உழைப்பை கொச்சைப்படுத்தியது இந்த நேரத்தில் நினைத்து பாருங்கள்.

ஊழலுக்காகத்தான் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தார்கள். ஊழலற்ற நேர்மையான ஆட்சியை பா.ஜனதா கட்சியால் மட்டுமே வழங்க முடியும். மாநில அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். மலைவாழ் மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி செம்மரக்கடத்தலுக்காக அழைத்துச்செல்லும் இடைத்தரகர்களை தமிழக அரசு கூடுதல் அக்கறை கொண்டு கவனிக்கவேண்டும்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாதான் காவிரி நீரை தரமாட்டேன் என கூறி வருகிறார். தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் தமிழக பா.ஜனதா கண்டிப்பாக குரல் கொடுக்கும்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் தமிழக அரசின் பட்ஜெட் குறித்து கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், தமிழக பட்ஜெட்டில் எல்லாத்துறைகளிலும் கவனம் செலுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலுக்கு நிதி ஒதுக்கியுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரவேண்டும். பட்ஜெட் குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ஓட்டைப்பானையில் சமையல் செய்துள்ளதாக கூறியுள்ளார். பானையை ஓட்டை ஆக்கியதில் தி.மு.க.விற்கும் பங்குண்டு. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் சில ஆயிரம் கோடி கடன் இருந்தது. தற்போது 3½ லட்சம் கோடி கடனை தாண்டி உள்ளது என்றால் அதில் தி.மு.க., அ.தி.மு.க. இருவருக்குமே முக்கிய பங்கு உள்ளது. அந்த ஓட்டை பானையை மாற்ற பா.ஜனதாவால் தான் முடியும் என்றார்.

Next Story