மாநிலத்தின் வருவாய் ரூ.2 ஆயிரம் கோடி குறைந்துள்ளது


மாநிலத்தின் வருவாய் ரூ.2 ஆயிரம் கோடி குறைந்துள்ளது
x
தினத்தந்தி 16 March 2018 4:43 AM IST (Updated: 16 March 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

பத்திரப்பதிவு தடை, ஜி.எஸ்.டி. வரியால் மாநிலத்தின் வருவாய் ரூ.2 ஆயிரம் கோடி குறைந்துள்ளது என்று அமைச்சர் கந்தசாமி பேசினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மணவெளி தொகுதி டி.என்.பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, புதுவை நுகர்வோர் எதிரொலி சார்பில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். அரசு கொறடா அனந்தராமன் முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர் ராமலிங்கம், தபால் துறை ஓய்வுபெற்ற அதிகாரி ராஜாராம், ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனம் ஆகியோர் நுகர்வோரின் உரிமைகள் குறித்து பேசினார்கள்.

விழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போன்ற போட்டிகள் நடந்தப்பட்டது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் கந்தசாமி பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

நமது நாட்டில் தரமாக பொருட்களை வாங்குவதற்கு சட்டம் உள்ளது. இதை பயன்படுத்தி உங்களது உரிமையை பெற்றுக்கொள்ளலாம். நமது மாநிலத்தில் நிதி தட்டுப்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது. அதையும் சமாளித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பத்திரப்பதிவு தடை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அகற்றம் போன்றவற்றால் மாநிலத்தின் வருவாய் 2 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,500 கோடியை இது வரை பெற முடியாமல் உள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும்போது நமக்கு 70 சதவீதம் மானியம் வழங்கியது. ஆனால் தற்போதுள்ள பா.ஜ.க. அரசு 27 சதவீதம் மட்டுமே வழங்குகிறது.

எனவே மாநிலத்தின் வருவாயை பெருக்க புதிய திட்டங்கள் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் நடந்து முடிந்த எம்.பி., இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது. மீண்டும் காங்கிரஸ் அலை அனைத்து பகுதிகளிலும் வீசும் நிலை விரைவில் வரும். மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமையும். அதனால் நமது மாநிலத்திற்கு பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப் படும். இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.


விழாவில் சூற்றுச்சுழல் துறை, எடைகள் மற்றும் அளவைகள் துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நுகர்வோர் உரிமை குறித்த மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முடிவில் நுகர்வோர் எதிரொலி தலைவர் வீரசேகரன் நன்றி கூறினார்.

Next Story