இந்திய கிரிக்கெட் அணியில் தமிழர்களின் ஆதிக்கம்


இந்திய கிரிக்கெட் அணியில் தமிழர்களின் ஆதிக்கம்
x
தினத்தந்தி 16 March 2018 5:45 AM GMT (Updated: 16 March 2018 5:30 AM GMT)

இந்திய கிரிக்கெட் அணியில் மராட்டியம், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநில வீரர்களின் ஆதிக்கமே பெரும்பாலும் கொடிகட்டி பறப்பது உண்டு. அந்த நிலைமை இப்போது மெல்லமெல்ல மாறுகிறது.

சமீப காலமாக தமிழர்களும் கோலோச்ச தொடங்கி இருப்பதை பார்க்க உற்சாகம் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர்கள் யார்-யார்? என்று கேட்டால் சட்டென்று நினைவுக்கு வருபவர்கள்..... வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன், ராபின்சிங் (பிறந்தது வெஸ்ட் இண்டீசாக இருந்தாலும் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து தமிழக ரஞ்சி அணிக்காக ஆடினார்), டபிள்யூ.வி.ராமன், சடகோபன் ரமேஷ், பத்ரிநாத், ஹேமங் பதானி, எல்.பாலாஜி, முரளிவிஜய், அஸ்வின், தினேஷ் கார்த்திக் என்று விரல் விட்டு எண்ணி சொல்லி விட முடியும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை சாய்த்த சாதனையாளரான ‘சுழல் சூறாவளி’ ஆர்.அஸ்வின், தடுப்பாட்டத்தில் கில்லாடியான முரளிவிஜய் ஆகிய இரு தமிழர்களும் தற்போது டெஸ்ட் அணியில் திடமான இடத்தை பிடித்துள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்கள் காயம் அடைந்தால், மாற்று வீரர் இடத்திற்கு மற்றொரு தமிழக வீரர் அபினவ் முகுந்த் வைக்கப்பட்டுள்ளார்.

குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டி பக்கம் திரும்பினால், அங்கும் தமிழர்கள் தங்களது தடத்தை அழுத்தி பதிய ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோர் ஆடுகிறார்கள். அதுவும் மூன்று பேரும் ஒரு சேர களம் கண்டு பட்டையை கிளப்புவது கூடுதல் சிறப்பாகும்.

பொதுவாக, களத்திற்குள் வியூகங்களை எதிரணியினர் அறிந்து விடக்கூடாது என்பதற்காக வீரர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்து தங்களது தாய்மொழியில் பேசுவது வழக்கம். இந்திய வீரர்கள் அடிக்கடி தங்களுக்குள் இந்தி மொழியில் பேசுவதை பார்க்க முடியும்.

இப்போது, சர்வதேச கிரிக்கெட் களத்திற்குள் தமிழ் மணமும் வீசத் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரின் போது முரளிவிஜய், கர்நாடக வீரர் லோகேஷ் ராகுலுடன் தமிழில் பேசியது சமூக வலைதளத்தில் வைரலானது. இலங்கை முத்தரப்பு தொடரிலும் தமிழ்மொழி கொஞ்சி விளையாடுகிறது. வங்காளதேசத்திற்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் மைதானத்தில் நடந்த உரையாடல் இது....

பந்து வீசும் வாஷிங்டன் சுந்தரை நோக்கி விஜய் சங்கர்: டேய்... ரைட்ல போடாதே டா... லெப்ட்சைடு போடு”

பிறகு விஜய் சங்கரிடம், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்: “அவன் (வாஷிங்டன்) சொன்னா கேட்கமாட்டேங்கிறான்டா... பரவாயில்லை. அவன் ஸ்டைலிலேயே போடட்டும்”

இன்னொரு முறை...தினேஷ்கார்த்திக், வாஷிங்டன் சுந்தரை நோக்கி:- ‘மச்சான் சும்மா வெளியே போடு....இறங்குனா மாட்டிக்கிடுவான்’

இவர்கள் பேசுவதை கேட்டு இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா ஒரு பக்கம் குழம்பி போனாலும், ‘நல்லது நடந்தால் சரி...’ என்று நினைத்து கண்டுகொள்ளவில்லை. அதே சமயம் இவர்களின் தமிழ் உரையாடலுக்கு, சமூக வலைதளங்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகி விட்டது. இந்த வீடியோ காட்சியை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

இந்திய அணி 86 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. தமிழக அணியில் இருந்து இதுவரை இந்திய அணிக்காக ஆடியவர்களின் எண்ணிக்கை 30. அதிலும் கடைசி 10 ஆண்டுகளில் 7 பேர் இடம் பிடித்துள்ளனர். இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக, இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். சீசனில் முதல்முறையாக இரு தமிழர்களுக்கு ‘அணித் தலைவர்’ என்ற மகத்தான கிரீடம் கிட்டியுள்ளது. ஆர்.அஸ்வின், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும், தினேஷ் கார்த்திக், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

உள்ளூர் கிரிக்கெட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாலும், டி.என்.பி.எல். போன்ற போட்டிகளின் வருகையாலும் தமிழ்நாட்டில் இருக்கும் திறமையான வீரர்கள் அடையாளம் காணப்பட்டு அணிவகுத்து நிற்கிறார்கள். தேசிய அணிக்குள் தமிழர்களின் கம்பீரமான வீறுநடை இனி வரும் காலங்களில் இன்னும் எகிறட்டும். அதற்காக நாமும் வாழ்த்துவோம்!

- ஜெய்பான்

Next Story