புகார் கொடுக்க வந்த இளம்பெண் விஷம் குடித்ததால் பரபரப்பு


புகார் கொடுக்க வந்த இளம்பெண் விஷம் குடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 March 2018 4:00 AM IST (Updated: 16 March 2018 11:03 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே காதலித்து திருமணம் செய்ய மறுத்ததால், புகார் மனு கொடுக்க போலீஸ் நிலையத்திற்கு வந்த இளம்பெண் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா பென்னங்கூரைச் சேர்ந்தவர் சவுமியா (வயது 26). கெலமங்கலம் அருகே உள்ள அனுசோனையை சேர்ந்தவர் கிரீஷ் (31). இவர்கள் 2 பேரும் மதகொண்டப்பள்ளியில் உள்ள ஒரு இருசக்கர வாகன ஷோரூமில் 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் சவுமியா கிரீசிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். அதற்கு கிரீஷ் மறுத்து இளம்பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அவர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுக்க வந்தார். அப்போது யாரும் இல்லாத நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து சவுமியா தற்கொலைக்கு முயன்றார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த இளம்பெண்ணை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக இளம்பெண் சவுமியா கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரீசை கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான கொடுமையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புகார் கொடுக்க போலீஸ் நிலையத்திற்கு சென்ற இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story