ரூ.75 கோடி செலவில் நொய்யல் ஆறு மேம்படுத்தப்படும் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
ரூ.75 கோடி செலவில் நொய்யல் ஆறு மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் திருப்பூரில் கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், கரைபுதூர்நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்தும் நடைமுறை குறித்தும், சுத்தப்படுத்துவது மட்டுமின்றி ஆறு முழுவதும் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாகவும், இரு கரைகளிலும் தார்சாலைகள் அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழக அரசு சுற்று சூழல் துறையின் மேம்பாட்டுக்கு என்று அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. இதில் திருப்பூர் மக்கள் பயன்பெறும் வகையில் நொய்யல் ஆற்றை சீரமைப்பதற்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது நொய்யல் ஆற்று பகுதிகளையும், அதன் கிளை வாய்க்கால்களான ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை உள்ளிட்ட ஓடைகளையும் ஆய்வு செய்து கரைகளை பலப்படுத்தவும், ஓரங்களில் அலங்காரம் மின்விளக்குகள் அமைக்கவும், இரு பக்கங்களிலும் சாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இதன்படி சுமார் 13 கிலோமீட்டர் தூரம் வரை நொய்யல் ஆற்றை மேம்படுத்துவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story