போலி ஆவணம் தாக்கல் செய்ததாக புகார்: நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை கோரிய மனுவை ஏற்கலாமா? 19-ந் தேதி விசாரணை


போலி ஆவணம் தாக்கல் செய்ததாக புகார்: நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை கோரிய மனுவை ஏற்கலாமா? 19-ந் தேதி விசாரணை
x
தினத்தந்தி 17 March 2018 5:00 AM IST (Updated: 17 March 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் தனுஷ் மீது, போலி ஆவணம் தாக்கல் செய்ததாக கூறப்பட்ட மனு மீதான விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு கோர்ட்டு தள்ளி வைத்தது.

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவர், நடிகர் தனுசை தனது மகன் என்றும், தனக்கு மாதம் தோறும் ஜீவனாம்சம் வழங்கக்கோரியும் மேலூர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த மேலூர் நீதிமன்றம், நடிகர் தனுஷ் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்த உத்தரவிற்கு தடை விதிக்கவும், மேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய கோரியும் மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு தனுஷ் மனு செய்திருந்தார். இந்த விசாரணையின் போது தனுஷ் ஆஜரான போது மருத்துவக்குழுவினர் அவருடைய அங்க அடையாளங்களை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

இந்தநிலையில், தனுஷ் தனது பிறப்பு மற்றும் கல்விச் சான்றிதழ்களை போலியாக தயாரித்து தாக்கல் செய்து ஐகோர்ட்டை ஏமாற்றியதாக கூறி, கதிரேசன் மதுரை கோ.புதூர் போலீசிலும், கமிஷனரிடமும் மனு அளித்தார். இதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அவர் ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில் போலி ஆவணங்களை தாக்கல் செய்த தனுஷ் உள்ளிட்டோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வதற்காக நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு பட்டியலிடப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, மனுவின் மீதான விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். 

Next Story