‘கெப்பாசிட்டிஸ்’ திட்டம் மூலம் கோவையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது தடுக்கப்படும்: சுவிட்சர்லாந்து நாட்டு தூதர் தகவல்


‘கெப்பாசிட்டிஸ்’ திட்டம் மூலம் கோவையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது தடுக்கப்படும்: சுவிட்சர்லாந்து நாட்டு தூதர் தகவல்
x
தினத்தந்தி 17 March 2018 4:15 AM IST (Updated: 17 March 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

‘கெப்பாசிட்டிஸ்’ திட்டம் மூலம் கோவையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது தடுக்கப்படும் என்று சுவிட்சர்லாந்து நாட்டு தூதர் தெரிவித்தார்.

கோவை,

சீர்மிகு நகர திட்டத்தை (ஸ்மார்ட் சிட்டி) போல சுவிட்சர்லாந்து சார்பில் ‘கெப்பாசிட்டிஸ்’ என்ற திட்டம் மூலமும் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நமது நாட்டில் கோவை உள்பட 4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த நகரங்களில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க ஏராளமான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் கோவை மாநகர பகுதியில் செய்யப்பட உள்ள பணிகள் குறித்த கருத்தரங்கு கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சுவிஸ் முகமை வளர்ச்சி மற்றும் கூட்டுறவு தலைவர் மேரி லாரர் கிரேட்டஸ், துணைத்தலைவர் ஷிரிஷ் சின்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் இயக்குனர் இமானி குமார் வரவேற்றார்.

கருத்தரங்கில் சுவிட்சர்லாந்து நாட்டின் இந்தியா மற்றும் பூடான் நாடுகளுக்கான தூதர் ஆண்ட்ரியாஸ்பாம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை முக்கியமான நகரம் ஆகும். இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனால் பருவநிலையும் மாறிவிடுவதால் போதிய நேரத்தில் பெய்யக்கூடிய மழையும் பெய்வது இல்லை. ‘கெப்பாசிட்டிஸ்’ திட்ட பணிகள் செய்ய உள்ளதால் காற்று மாசு ஏற்படுவது தடுக்கப்படும். அத்துடன் பருவநிலையும் மாறாது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதும் தடுக்கப்படும்.

மேலும் குடிநீர், கழிவுநீர், குப்பை மேலாண்மை, போக்குவரத்து மேலாண்மை, நகர திட்டம் மற்றும் பசுமை பகுதி போன்ற வளர்ச்சி பணிக்காக 4 குழுக்கள் ஆலோசனை நடத்தி அறிக்கை அளிப்பார்கள். அந்த அறிக்கை சுவிட்சர்லாந்து தூதரகத்திடம் ஒப்படைக்கப்படும். தூதரகம் மூலம் கோவை மாநகராட்சியில் பணிகள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் பேசும்போது, ‘காற்று மாசு அளவிடும் கருவி மற்றும் குப்பையில் இருந்து மீத்தேன் வாயு மூலம் உழவர் சந்தையில் விளக்குகளுக்கான மின் உற்பத்தி செய்யும் பணிகள் இந்த திட்டத்தின் மூலம் செய்யப்பட உள்ளது. ஸ்மார்ட் சிட்டி, தூய்மை பாரதம், அம்ருத் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள், மாநகராட்சி திட்ட பணிகளுடன் கெப்பாசிட்டிஸ் திட்ட பணிகளும் கோவை மாநகர வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும்’ என்றார்.

கருத்தரங்கில் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், செயற்பொறியாளர்கள் ரவிச்சந்திரன், சரவணன் மற்றும் அனைத்து மண்டல சுகாதார ஆய்வாளர்கள், பொறியாளர்கள், தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story