மொபட் மோதி படுகாயம் அடைந்த 2 பேரின் நிலைமை என்ன? தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் சாலை மறியல்–பரபரப்பு


மொபட் மோதி படுகாயம் அடைந்த 2 பேரின் நிலைமை என்ன? தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் சாலை மறியல்–பரபரப்பு
x
தினத்தந்தி 17 March 2018 2:30 AM IST (Updated: 17 March 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே, பெண் போலீஸ் ஓட்டி வந்த மொபட், மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி,

புதுக்கோட்டை அருகே, பெண் போலீஸ் ஓட்டி வந்த மொபட், மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களின் நிலைமை என்ன? என்று தெரியப்படுத்தும்படி கூறி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டிட தொழிலாளிகள்

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள தெற்கு காரச்சேரியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் லட்சுமணன் (வயது 34). அதே பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (26). இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளிகள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடிக்கு வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

மோட்டார் சைக்கிளை லட்சுமணன் ஓட்டினார். மோட்டார் சைக்கிள் புதுக்கோட்டை அருகே தட்டப்பாறை விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது தட்டப்பாறை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் ஜெயசுந்தரி (42) என்பவர் பணி முடிந்து புதுக்கோட்டையில் உள்ள தனது வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதியது.

2 பேர் படுகாயம்


இதில் லட்சுமணன், சங்கரலிங்கம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். ஜெயசுந்தரிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காயம் அடைந்தவர்களை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று ஜெயசுந்தரி வீடு திரும்பினார். படுகாயம் அடைந்த லட்சுமணன், சங்கரலிங்கம் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார், விபத்தை ஏற்படுத்தியதாக போலீஸ் ஏட்டு ஜெயசுந்தரி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் லட்சுமணன், சங்கரலிங்கம் ஆகியோரின் உறவினர்கள் திரண்டனர். அவர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்கள் நிலைமை பற்றி தெரியப்படுத்த வேண்டும் என்று கூறி, அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர் உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிஹரன், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story