மாவட்டம் முழுவதும் 148 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது


மாவட்டம் முழுவதும் 148 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 17 March 2018 3:30 AM IST (Updated: 17 March 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டம் முழுவதும் 148 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

சேலம்,

தமிழகம் முழுவதும் நேற்று எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இந்த தேர்வுகள் அடுத்த மாதம் 20-ந் தேதிவரை நடக்கிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்காக 148 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. எஸ்.எஸ்.எல்.சி.தேர்வை 23 ஆயிரத்து 42 மாணவர்களும், 22 ஆயிரத்து 683 மாணவிகளும் என மொத்தம் 45 ஆயிரத்து 725 பேர் எழுதினர். 455 மாணவர்கள் மற்றும் 224 மாணவிகள் என 679 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வுகளில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருக்க 148 முதன்மை கண்காணிப்பாளர்கள், 148 துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வில் மாணவ-மாணவிகள் காப்பியடிப்பதை தடுக்க பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதுவதற்கு முன்பு மாணவிகள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

சேலம் 4 ரோடு அருகே சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை மாவட்ட கலெக்டர் ரோகிணி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, தேர்வு மையத்தில் முறைகேடுகள் ஏதும் நடக்காமல் இருக்க வேண்டும் என்று தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கவேல் (சேலம்), செல்வராஜ் (சங்ககிரி), மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அசோக்குமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் வெளிநபர்கள் உள்ளே நுழையாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சேலம் மாவட்டத்தில் 23,497 மாணவர்களும், 22,907 மாணவிகளும் என மொத்தம் 46,404 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். ஆனால் தமிழ் முதல் தாள் தேர்வை 45,725 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். 679 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வுகளை கண்காணிக்க உதவி கலெக்டர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தேர்வு மையங்களுக்கு அவ்வப்போது சென்று கண்காணிப்பாளர்கள்.

அனைத்துத் தேர்வு மையங்களிலும் மின்சாரம், குடிநீர் மற்றும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. எஸ்.எஸ். எல்.சி பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் எவ்வித அச்சமும், தயக்கமுமின்றி நன்றாக படித்து சிறப்பாக தேர்வுஎழுதி நல்ல மதிபெண்கள் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story