பாதிப்பை ஏற்படுத்தும் அரசு பணியாளர் நிர்வாக சீரமைப்பு குழுவை கலைக்க வேண்டும், என்.ஜி.ஓ. சங்கம் வலியுறுத்தல்


பாதிப்பை ஏற்படுத்தும் அரசு பணியாளர் நிர்வாக சீரமைப்பு குழுவை கலைக்க வேண்டும், என்.ஜி.ஓ. சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 March 2018 3:00 AM IST (Updated: 17 March 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அரசு அலுவலகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசு பணியாளர் நிர்வாக சீராய்வு குழுவினை தமிழக அரசு கலைக்க வேண்டும் என என்.ஜி.ஓ.சங்க மாநில இணைசெயலாளர் பாலசுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.

விருதுநகர்,

என்.ஜி.ஓ. சங்க மாநில இணை செயலாளர் பாலசுப்பிரமணியன் விருதுநகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் 27-க்கும் மேற்பட்ட நல திட்டங்களை செயல்படுத்த அரசு தனியாக பணியாளர்களை நியமிக்கவில்லை. தற்போது உள்ள நிலையில் 2½ லட்சத்துக்கும் மேல் அரசு அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏற்கனவே பணியில் உள்ள அலுவலர்கள் தான் இந்த பணிகளை செய்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், மனஅழுத்தமும் ஏற்படும் நிலை உள்ளது. காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என ஏற்கனவே தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

என்.ஜி.ஓ. யூனியன் சார்பில் புதிய பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்றும் 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அரசு வழங்கி உள்ள ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்றும் அரசிடம் முறையிட்டு வருகிறோம். ஒப்பந்த அடிப்படையில் அரசு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து விட்டு அரசு பணியாளர் நிர்வாக சீரமைப்பு குழு என்ற குழுவை அரசு நியமித்துள்ளது. இந்த குழுவிற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஆதிஷேசையா தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த குழு தனது அறிக்கையை வரும் ஜூன் மாதம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது. ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக இருந்த அடிப்படை பணியாளர்கள் பணியிடங்கள் தற்போது நீக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதால் புதிய பணியிடங்கள் உருவாக்குவதற்கோ, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கோ, வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டு விடும். ஏற்கனவே தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 படித்த பலர் வேலையின்றி தவித்து வருகிறார்கள். தமிழக அரசில் காலியாக உள்ள 2½ லட்சம் காலிப் பணியிடங்களில் இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினால் அவர்களது குடும்பத்தினர் வாழ்வாதாரம் பெறுவார்கள்.

இந்த நிலையில் சீரமைப்புக்குழுவினர் அடிப்படை பணியாளர் நியமனத்திற்கு தடை விதித்து பரிந்துரை செய்யும் நிலையில் வேலை இன்மை பெருகுவதோடு பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தும். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக பணியாளர்களை நியமிப்பதை தவிர்த்து விட்டு ஏற்கனவே உள்ள பணியிடங்களை ரத்து செய்து ஆள்குறைப்பு நடவடிக்கை எடுப்பது என்பது வேதனை தரும் விஷயமாகும். எனவே அரசு அலுவலர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அரசு பணியாளர் நிர்வாக சீரமைப்பு குழுவினை உடனடியாக கலைத்து விட்டு காலியாக உள்ள பணியிடங்களில் இளைஞர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story