சங்கரன்கோவில் அருகே போலீஸ் நிலையத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


சங்கரன்கோவில் அருகே போலீஸ் நிலையத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 17 March 2018 2:30 AM IST (Updated: 17 March 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே சின்னக்கோவிலான்குளம் 4 பேர் மீது போலீசார் பொய்வழக்கு போட்டு தாக்கியதாக புகார்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே சின்னக்கோவிலான்குளம் 4 பேர் மீது போலீசார் பொய்வழக்கு போட்டு தாக்கியதாக புகார் தெரிவித்து, போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மணல் கடத்தல்

சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார்குளத்தை சேர்ந்தவர்கள் வெள்ளத்துரை மகன் அப்பாத்துரை (35), சுப்பையா மகன் மகேந்திரன் (22), கருப்பசாமி மகன் காளிராஜ் (24), சண்முகையா மகன் கருப்பசாமி (32). இவர்கள், மணல் கடத்தியதாக வந்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் இரவு 2 மணிக்கு போலீசார், அந்த 4 பேரையும் பிடித்தனர்.

மணல் கடத்தியதிற்கு பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்த போலீசார் சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அவர்களை அழைத்து சென்றனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

பின்னர், சின்னகோவிலான்குளம் அழைத்து சென்ற போலீசார் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த தகவல் ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் பரவியது. அதன்பேரில் ஏராளமான கிராம மக்கள் சின்னகோவிலான்குளம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து சங்கரன்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து ஊர் தலைவர் முருகன், பொருளாளர் திருமலைச்சாமி, நெல்லை மாவட்ட சமாஜ்வாடி கட்சி மாவட்ட செயலாளர் பிரேம்குமார், உள்ளிட்டவர்கள் போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் 4பேரையும் தாக்கிய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கற்பகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அந்த 4 பேரையும் உடனடியாக கோர்ட்டில் ஆஜர் செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.

கிராம மக்கள் புகார்

இது பற்றி கிராம மக்கள் கூறும்போது, ‘நேற்று முன்தினம் இரவு ஆட்கொண்டார்குளத்திற்கு வந்த போலீசார் வீட்டில் து£ங்கி கொண்டிருந்த அப்பாத்துரையையும், கோவிலில் படுத்து து£ங்கி கொண்டிருந்த மற்ற 3பேரையும் மணல் கடத்தியதாக பொய்வழக்கு போட்டு அழைத்து சென்றனர். மேலும் வீட்டில் நின்று கொண்டிருந்த டிராக்டரையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அதை தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் சின்னகோவிலான்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று மிகவும் முரட்டுத்தனமாக தாக்கினர். இது குறித்து போலீசார் முறையாக பதில் தர மறுக்கின்றனர். தற்போது 4 பேர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமைக்கு ஆணையத்துக்கு தகவல் அளித்துள்ளோம். தாக்குதல் நடத்திய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்’ என தெரிவித்தனர்.

Next Story