மாவட்டத்தில் 28 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன
8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி சேலம் மாவட்டத்தில் 28 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.
சேலம்,
தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களிலும் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த சேவையை தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதற்கான கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி புதிய படங்களை திரையிடாமல் கடந்த 1-ந் தேதி முதல் திரைப்பட தயாரிப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய திரைப்படங்கள் திரையிடப்படாததால் பழைய திரைப்படங்கள், தியேட்டர்களில் திரையிடப்பட்டன. இதனால் ரசிகர்கள் கூட்டம் குறைந்ததால் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தியேட்டர்கள் பராமரிப்பு செலவுக்கு கூட வருவாய் வரவில்லை. இந்த நிலையில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டப்படி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும். இருக்கைகள் குறைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும். தியேட்டர்கள் லைசென்சை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். பராமரிப்பு கட்டணமாக குளிர்சாதன தியேட்டர்களுக்கு ரூ.5-ம், குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டருக்கு ரூ.3-ம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தியேட்டர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டன. அதாவது, சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மொத்தம் 35 சினிமா தியேட்டர்கள் உள்ளன. இதில் 28 தியேட்டர்கள் நேற்று முதல் மூடப்பட்டன. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தியேட்டருக்கு சினிமா பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காணமுடிந்தது. சேலம் மாநகரில் உள்ள தியேட்டர்களுக்கு பொழுது போக்கிற்காக நேற்று சினிமா பார்க்க வந்த ரசிகர்கள், தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து சேலம் சரக சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் இளங்கோவன் கூறுகையில், தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட 8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். சேலம் மாவட்டத்தில் 35 தியேட்டர்கள் உள்ளன. இதில் 7 தியேட்டர்களை தவிர மற்ற 28 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மொத்தம் 131 தியேட்டர்கள் உள்ளன. இதில் 80 சதவீதம் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. 20 சதவீதம் தியேட்டர்கள் மட்டுமே செயல்படுகின்றன. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தியேட்டரை இயக்க மாட்டோம், என்றார்.
Related Tags :
Next Story