புதுமண்டபத்தில் கடைகளை திறந்து பராமரிக்கலாம், விற்பனையில் ஈடுபடக்கூடாது, ஐகோர்ட்டு உத்தரவு


புதுமண்டபத்தில் கடைகளை திறந்து பராமரிக்கலாம்,  விற்பனையில் ஈடுபடக்கூடாது, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 March 2018 4:00 AM IST (Updated: 17 March 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

புதுமண்டபத்தில் கடைகளை திறந்து பராமரிக்கலாம் ஆனால் விற்பனையில் ஈடுபடக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை புதுமண்டபம் வியாபாரிகள் மற்றும் தையல் தொழிலாளர்கள் சங்கத்தலைவர் முத்துப்பாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

புதுமண்டபத்தில் 300 வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். புதுமண்டபத்தில் ஒலி, ஒளி காட்சிக்கூடம் அமைக்க 2010–ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. அங்கு கடை வைத்திருந்த எங்களுக்கு குன்னத்தூர் சத்திரம் பகுதியில் வணிக வளாகம் அமைத்து தருவதாக உறுதிஅளிக்கப்பட்டது. தற்போது வரை அங்கு வணிகவளாக கட்டுமான பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால் புதுமண்டபத்தில் கடைகளை தொடர்ந்து நடத்த அரசாணைப்படி குத்தகை நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 2–ந்தேதி மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக கோவிலுக்கு வெளிப்புறத்தில் உள்ள கடைகளை ஒரு வாரத்திற்கு பின்னர் திறக்கலாம் என்ற உறுதியுடன் கடைகளை மூட மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் உத்தரவிட்டார். அதனை ஏற்று நாங்களும் கடைகளை மூடி கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைத்தோம்.

ஆனால் புதுமண்டபத்தில் உள்ள கடைகளையும் வெளிப்புறத்தில் உள்ள கடைகளையும் முழுவதுமாக அகற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக எங்களுக்கு எந்தவித நோட்டீசும், அறிவிப்பும் வழங்கப்படவில்லை. இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. எனவே புதுமண்டபத்தில் உள்ள கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும். மேலும், மாற்று இடம் வழங்கும் வரை கடைகளை காலி செய்யவோ, வியாபாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், புதுமண்டபத்தில் உள்ள கடைகளை திறந்து வியாபாரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் வியாபாரத்தில் ஈடுபடக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை வருகிற 22–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story