அனைத்துக் கட்சியினரும் பிரதமரின் வீட்டை முற்றுகையிட வேண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேண்டுகோள்


அனைத்துக் கட்சியினரும் பிரதமரின் வீட்டை முற்றுகையிட வேண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 March 2018 4:15 AM IST (Updated: 17 March 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் அனைத்துக்கட்சியினரும் பிரதமரின் வீட்டை முற்றுகையிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

புதுச்சேரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் புதுவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க முயற்சிக்கிறது. ஆனால் சமீபத்தில் நடந்த 3 எம்.பி. தொகுதி தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்து உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் முதல்-அமைச்சரின் சொந்த தொகுதியில் பாரதீய ஜனதாவின் தோல்வி என்பது இந்திய மக்களின் எதிர்ப்பினை காட்டுவதாக உள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் சேவை வரியால் சிறு குறு தொழில் செய்பவர்கள் திண்டாடி வருகின்றனர். வங்கி மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டில் பிரதமரை சந்தித்துப் பேசுகிறார்கள். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்க பிரதமர் நடவடிக்கை எடுத்து வருகிறார். தொலைபேசி துறையை தனியார் மயமாக்கும்போது எதிர்ப்பு தெரிவித்தோம். விரைவில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியாரிடம் கொடுத்து விடுவார்கள்போல் உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் விவசாய கொள்கையை எதிர்த்து போராட உள்ளோம்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று வெளிநாட்டுக்கு ஓடிவிடுகிறார்கள். ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுக்கிறது. மதக்கலவரத்தை தூண்டும் அரசாக உள்ளது. இதைக்கண்டு நாடே கொந்தளிக்கிறது.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை மக்களின் பிரச்சினைகளை எந்த அரசும் தீர்க்கவில்லை. புதுவை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. வாரந்தோறும் புதுவை இளைஞர்கள் சென்னைக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் புதுவை மாநிலம் விரைவில் முதியோர் வாழும் மாநிலமாக மாறிவிடும். புதுவையில் உள்ள மில்களுக்கு ரூ.180 கோடி ஒதுக்கினால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை கொடுக்கலாம்.

உலகமயம், தாராளமயத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாக புதுச்சேரி உள்ளது. இங்குள்ள ரேஷன்கடைகளில் பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இதைப்பற்றி எல்லாம் கவர்னரும், முதல்-அமைச்சரும் கவலைப்படவில்லை. அவர்களுக்குள் அதிகாரப்போட்டிதான் நடக்கிறது. புதுவையில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து மேலும் பலகட்ட போராட்டங்களை நடத்துவோம். மத்திய, மாநில அரசுகள் புதுவை மக்களுக்கு விரோதமாக உள்ளது.

காவிரி பிரச்சினையில் பிரதமர் நினைத்தால் ஒரே நாளில் மேலாண்மை வாரியத்தை அமைத்துவிடலாம். ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற முதலாளித்துவத்துக்கு ஆதரவான திட்டங்களில்தான் அவர் கவனம் செலுத்துகிறார். டெல்டா மாவட்டங்களை ரசாயன மண்டலங்களாக மாற்றுவதுதான் அவர்களது எண்ணமாக உள்ளது.

வருகிற 5-ந்தேதி முதல் டெல்டா மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் அனைத்துக்கட்சிகளும் பங்கேற்க வேண்டும். காவிரி பிரச்சினை தொடர்பாக பிரதமர் தமிழக முதல்-அமைச்சர், அனைத்துக்கட்சியினரை சந்திக்க மறுக்கிறார். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி பிரதமருக்கு கவலையில்லை. தீர்மானம் என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஒரு செயல். அதனால் பயன் இல்லை. எனவே அனைத்துக்கட்சியினரும் டெல்லி சென்று பிரதமரின் அலுவலகம், வீட்டை முற்றுகையிட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடருவோம். ஒருவேளை பிரதமர் அதிகாரம் இல்லாத மேலாண்மை வாரியத்தை அமைக்கலாம். கர்நாடகம் தண்ணீர் தராவிட்டால் நீர் நிலைகளை கைப்பற்றி உத்தரவினை செயல்படுத்தும் ஆணையத்தை அமைக்கவேண்டும்.

இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

பேட்டியின்போது புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம், நிர்வாகிகள் பெருமாள், முருகன், ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story