தண்டராம்பட்டு அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி பெண் உள்பட 2 பேர் பலி
தண்டராம்பட்டு அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தண்டராம்பட்டு,
தண்டராம்பட்டு அருகில் உள்ள நாளாள்பள்ளம் மோட்டூர் என்ற இடத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு வருவதற்காக வழக்கம் போல் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து அந்த கல்லூரியின் பஸ் புதுப்பாளையத்திற்கு சென்று மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரி நோக்கி வந்தது. பஸ்சை டிரைவர் ராமமூர்த்தி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
தண்டராம்பட்டு பக்கத்தில் உள்ள முருகர் கோவில் அருகே பஸ் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
அப்போது ரோட்டில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த கருப்பன் என்பவரது மனைவி அமுதா (வயது 43), சைக்கிளில் சென்ற மாரி (65) ஆகியோர் மீது பஸ் மோதியது. தொடர்ந்து அந்த பஸ் நிற்காமல் புளிய மரத்தில் மோதி நின்றது. இதையடுத்து டிரைவர் ராமமூர்த்தி பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார்.
படுகாயம் அடைந்த அமுதா, மாரி ஆகிய இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அமுதா, மாரி ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ராமமூர்த்தியை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story