எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது மாவட்டத்தில் 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் 38 ஆயிரத்து 714 மாணவ-மாணவிகள் எழுதினர்.
கடலூர்,
பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த 1-ந் தேதியும், பிளஸ்-1 பொதுத் தேர்வு 7-ந் தேதியும் தொடங்கியது. இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது.
இதற்காக மாவட்டத்தில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 78 தேர்வு மையங்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 49 தேர்வு மையங்களும் என மொத்தம் 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
முதல்நாளான நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் 36 ஆயிரத்து 869 மாணவ-மாணவிகள், 1,845 தனித்தேர்வர்கள் என மொத்தம் 38 ஆயிரத்து 714 பேர் தேர்வு எழுதினர். 511 மாணவ-மாணவிகள், 87 தனித்தேர்வர்கள் என மொத்தம் 598 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு மையங்களை கல்வித்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் தண்டபாணி பார்வையிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் 127 தேர்வு மையங்களில் மொத்தம் 37 ஆயிரத்து 380 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை எழுதுகிறார்கள். இதில் தனித்தேர்வர்களின் எண்ணிக்கை 1932 ஆகும். தேர்வை கண்காணிக்க 296 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க 127 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பொதுத் தேர்வு நடைபெறுவதற்கு போதிய பாதுகாப்பு வசதிகளும், அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு தேர்வு அமைதியான முறையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.அப்போது முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர்கள் தேவநாதன், முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story