காந்தி, காமராஜர் நினைவிடம் பராமரிக்காததை கண்டித்து தென் சென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்


காந்தி, காமராஜர் நினைவிடம் பராமரிக்காததை கண்டித்து தென் சென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2018 5:00 AM IST (Updated: 17 March 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

காந்தி, காமராஜர் நினைவிடம் பராமரிக்காததை கண்டித்து தென்சென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை,

சென்னை கிண்டியில் காந்தி, காமராஜருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதை பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது.

இந்த நிலையில் இருபெரும் தலைவர்களின் நினைவிடங்களை அரசின் பொதுப்பணித்துறை சரியாக பராமரிக்காததை கண்டித்து தென்சென்னை காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தென் சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில் திருவான்மியூர் தொகுதி தலைவர் திருவான்மியூர் மனோகரன், மாவட்ட செய்திதொடர்பாளர் துறைமுகம் ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் குற்றவாளி ஜெயலலிதா நினைவிடத்துக்கு ஒரு நீதி? காந்தி, காமராஜர் நினைவிடத்துக்கு ஒரு நீதியா? என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக காமராஜர் நினைவிடத்தில் வைக்கப்பட்டு இருந்த காமராஜர் சிலைக்கும், அவருடைய நினைவிடத்துக்கும் கராத்தே தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதுகுறித்து கராத்தே தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பராமரிக்காமல் இருக்கிறது

நிதிநிலை அறிக்கையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு ரூ.50 கோடியும், அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ரூ.20 கோடியும் ஒதுக்கி இருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் கல்வி கண் திறந்த காமராஜர், நேர்மையாக அரசியல் செய்தார். அவர் நினைவிடம் சரியாக பராமரிக்காமல் அலங்கோலமாக கிடக்கிறது.

அவருடைய நினைவிடத்துக்கு வரும் நுழைவுவாயில் பகுதி கதவு எப்போதும் பூட்டப்பட்டே கிடக்கிறது. அதற்கு முன்பாக இளநீர் மற்றும் டீக்கடைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல், காந்தி நினைவிடமும் பராமரிப்பின்றி அப்படியே தான் காட்சியளிக்கிறது.

எடப்பாடி அரசு உடனடியாக காந்தி, காமராஜர் நினைவிடத்தை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, குமரிஅனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து சோனியா காந்தி, ராகுல் காந்தியின் ஒப்புதலோடு காங்கிரஸ் அறக்கட்டளை காந்தி, காமராஜர் நினைவிடங்களை பராமரிக்க உரிமை கோருவோம்.

மாற்றி அமைக்க வேண்டும்

ஏற்கனவே மறைமலைநகர் ரெயில் நிலையத்துக்கு காமராஜர் ரெயில் நிலையம் என்று பெயர் வைக்க போராட்டம் நடத்தினோம். அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்துக்கு காமராஜர் பெயரை வைத்தார்.

அதேபோல், காந்தி, காமராஜர் நினைவிடத்தை பராமரிப்பது தொடர்பாக நாங்கள் மீண்டும் போராட்டம் நடத்துவோம். தேவைப்பட்டால், திருநாவுக்கரசரின் ஒப்புதல் பெற்று காமராஜர் நினைவிடம் முன்பு தென்சென்னை காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் இருப்போம்.

அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதி எப்படி பொலிவுடன் செய்தார்களோ? அதேபோல், காந்தி, காமராஜர் நினைவிடத்தை மாற்றி அமைக்க வேண்டும். அதற்கு வருகின்ற சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி வலியுறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் காங்கிரஸ் தொண்டர்கள் சேர்ந்து நன்கொடை வழங்கி அமைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story