ஈரோடு சூரம்பட்டியில் பாதாள சாக்கடை குழி தோண்டிய இடத்தில் லாரியின் சக்கரம் பதிந்தது
ஈரோடு சூரம்பட்டியில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டிய இடத்தில் லாரியின் சக்கரம் பதிந்தது.
ஈரோடு,
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் சூரம்பட்டி பகுதியில் கடந்த 1½ ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடந்து வருகின்றன. இதனால் சூரம்பட்டி நால்ரோட்டில் இருந்து சூரம்பட்டிவலசு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் நடைபெறுவதால் சூரம்பட்டி பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக வாகனங்கள் சென்று வரும்போது புயல்போல் புழுதி கிளம்புகிறது. எனவே பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு கொடுத்தனர்.
இந்தநிலையில் கரூரில் இருந்து நேற்று காலை ஒரு லாரி கிரசர் மணல் பாரம் ஏற்றிக்கொண்டு சூரம்பட்டிவலசு நோக்கி சென்றுகொண்டு இருந்தது. அந்த லாரியை ஈரோட்டை சேர்ந்த தேவராஜ் (வயது 40) என்பவர் ஓட்டினார். அந்த லாரி சூரம்பட்டி எஸ்.கே.சி.ரோட்டில் வந்தபோது பாதாள சாக்கடை குழி தோண்டி மூடப்பட்ட பகுதியில் லாரியின் சக்கரம் பதிந்தது. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரமும், டிராக்டரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் லாரியில் உள்ள கிரசர் மணல் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர் பாதாள சாக்கடை தோண்டப்பட்ட இடத்தில் பதிந்திருந்த லாரி மீட்கப்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பகுதியில் புழுதி பறக்காமல் இருப்பதற்காக தண்ணீர் ஊற்றப்படுகிறது. இதனால் லாரியின் சக்கரம் பதிந்து உள்ளது. எனவே பணிகள் முடிந்த பகுதியில் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும்”, என்றனர்.
Related Tags :
Next Story