லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்


லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 March 2018 4:52 AM IST (Updated: 17 March 2018 4:52 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவையாறு,

திருவையாறை அடுத்த விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல்குவாரி அமைப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து மணல் குவாரி அமைக்கும் பணிக்காக லாரியில் பொக்லைன் எந்திரத்தை ஏற்றிகொண்டு விளாங்குடி கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விளாங்குடியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜசுந்தரம் மனைவி கலையரசி (வயது54) தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு வந்த லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் வந்தவர்கள், பொதுப்பணித்துறை அதிகாரி சுப்பையன் மணல் குவாரி அமைப்பதற்கு எங்களை வரசொன்னதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் லாரியை அங்கிருந்து திருப்பி அனுப்பினர். இதுகுறித்து கலையரசி நிருபர்களிடம் கூறியதாவது.

நாங்கள் கடந்த 25 ஆண்டுகாலமாக எங்கள் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்கவில்லை. அனுமதித்தால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்்பட்டு பாலைவனமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. எனவே தமிழக அரசும், மாவட்ட கலெக்டரும் எங்கள் பகுதியில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறினார்.

தகவல் அறிந்ததும் தாசில்தார் லதா, திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலாதியாகராஜன், பொதுபணித்துறை அலுவலர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் இதுசம்பந்தமாக தாசில்தார் அலுவலகத்தில் இன்று(சனிக்கிழமை) அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

Next Story