அன்பை விதைப்போம்... மனிதம் வளர்ப்போம்!


அன்பை விதைப்போம்... மனிதம் வளர்ப்போம்!
x
தினத்தந்தி 17 March 2018 1:45 PM IST (Updated: 17 March 2018 1:13 PM IST)
t-max-icont-min-icon

அன்பும் மரியாதையும் கேட்டுப் பெற வேண்டியவை அல்ல, கொடுத்துப் பெற வேண்டியவை. ஆனால் இன்று நம்மில் பலருக்கு அவற்றைக் காட்டத் தெரிவதில்லை, அல்லது காட்டுவது புரிவதில்லை. இல்லையென்றால் எந்த ஓர் அன்புக்கும் மரியாதைக்கும் சரியான பதில் கிடைத்திருக்கும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்கு ஒருவர் வந்தால் வீட்டில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள் ‘வாங்க’ என்று சொல்லி, உட்காரவைத்து, தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து வரவேற்பார்கள். ஒருவேளை பெற்றோர் வீட்டில் இல்லையென்றாலும் வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்று உபசரிக்க தவறுவதில்லை.

ஆனால் இன்றோ உறவினரோ, விருந்தினரோ வீட்டுக்கு யார் வந்தாலும், அவரை அறிமுகப்படுத்தும் அரை நொடி நேரமும் அந்நியமாக நின்று, அடுத்த நொடி படுக்கை அறைக்குள் சென்று அடைந்து கொள்ளும் தன்மையே அதிகமாக உள்ளது.

வீட்டில்தான் இப்படியென்றால் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் நிலைமை இன்னும் பரிதாபம். அந்தக்காலத்தில் குருகுல முறையில் ஆசிரியர்கள் மேடை மேல் அமர்ந்து மாணவர்கள் கீழே அமர்ந்து பயின்றார்கள். நற்பண்பு, நல்ல பழக்க வழக்கங்கள், மரியாதை ஆகியவற்றைக் கற்றுத்தரும் வகையில் அன்று கல்வி போதனை இருந்தது.

இன்று பெரும்பாலான கல்வி நிலையங்களில் ஆசிரியர் களுக்கு வகுப்பறையில் இருக்கையே கிடையாது. ஆசிரியர் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டும். மாணவர்கள் உட்கார்ந்து கொண்டு பாடம் கேட்க வேண்டும். மரியாதை மாற்றத்தின் ஆரம்பப்புள்ளி இதுதான்.

இதன்பிறகுதான் ஆசிரியர்களை நேரில் கண்டால் வணங்குவதும், முதுகுக்குப் பின்னால் கிண்டல் செய்வதும் அதிகரித்தது. பல நேரங்களில் ஆசிரியர்கள் கடந்து போனால் கூட கண்டுகொள்ளாமல் போகும் தலைமுறை உருவானது. உலகத்தில் இன்று பணமே பிரதானமாகப் போய்விட்டது. அன்பு, மரியாதை எல்லாம் தேடும் பொருளாகிவிட்டது.

தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்க வரும் ஒவ்வொரு மாணவரும் கட்டணம் செலுத்தித்தான் படிக்க வருகிறார்கள். கல்வி நிறுவனங்களுக்கு ஏற்பச் சில ஆயிரம் ரூபாய்களில் இருந்து சில லட்சங்கள் வரை கல்விக்கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க ஒவ்வொரு பெற்றோரும் எவ்வளவு பணம் செலவு செய்கிறார்கள் என்பதை அவர்கள் உணருவதில்லை. இந்தநிலை மாறவேண்டும். தினமும் வகுப்புகளில் என்ன கற்றுக் கொண்டீர்கள் என ஆராயுங்கள், அந்த கல்வியை மதியுங்கள்.

அதற்காக இன்றைய இளைஞர்களுக்கு அன்பும் மரியாதையும் இல்லை என்று கூறிவிட முடியாது. முதலில் பிரமிக்கப்பட்டு பின் ரசிக்கப்பட்டு... தொல்லையாகி சலிக்கப்பட்டு இறுதியில் உதாசீனப்படுத்தப்படும் அளவும் அன்பு செலுத்த முடியும். அதானால்தான் பல பெண்கள் திராவகத்துக்கும், நெருப்புக்கும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள், குழந்தைகள் படித்து வளர்வதில்லை, பார்த்துத்தான் வளர்கிறார்கள். எனவே எதை நாம் கொடுக்கிறோமோ அதைத்தான் பெறுகிறோம்.

அன்பு, மரியாதை எல்லாம் இல்லத்திலிருந்தே தொடங்க வேண்டும். நீங்கள் அன்பு செலுத்தி பதில் அன்பு கிடைக்கவில்லை என்றால் வன்முறையில் ஈடுபடுவது அன்பின் பண்பல்ல என்பதை உணரவேண்டும்.

நம் சுயமதிப்பை இழந்துதான் ஒருவரின் அன்பையோ, நெருக்கத்தையோ பெற முடியுமென்றால், அதை விட தனித் திருப்பதே நன்று என உணரவேண்டும்.

பெற்றோர்களும் கல்லூரியில் சேர்த்துவிட்டால் கரை சேர்த்து விடுவான் என கைவிரித்துப் போகாமல், தோழனாய், தோழியாய் கூடவே நடந்து பக்குவமாய் வழிகாட்டி பருவத்தைக் கடக்க வைப்பதுதான் காலத்தின் கட்டாயம்.

ஒரு முறை ஒரு மாணவனின் நடத்தை தொடர்ந்து முரண்பட்டு வருவதை உணர்ந்து தந்தையை அழைத்துக் கூறலாம் என தொலைபேசியில் தொடர்பு கொண்டால், ‘என்னால் வேலைக்கு லீவு போட்டு வரமுடியாது, அவன் என்ன குழந்தையா? நீங்கள் சொல்லியே கேக்கல, நான் சொன்னால் கேக்கவா போறான்?’ என பேசினார்.

ஆனால் நான் உறுதியாக இருந்து ஒரு மாதம் கழித்து வந்த பெற்றோரிடம் பேசும் பொழுதுதான் அவன் போதைக்கு அடிமையாகி உள்ளதைக் கூற முடிந்தது. இன்று அவன் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு அவன் பெற்றோரும் காரணம்.

பிள்ளைகளுக்காகத்தானே நாம் பணம் சம்பாதிக்கிறோம்? அந்தப் பிள்ளைகளுக்கே பிரச்சினை எனும் பொழுது எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

படித்து பல வருடம் கழித்தும் இன்றும் அன்புடனும், மரியாதையுடனும் தொடர்பில் இருக்கும் பல மாணவர்களை நான் அறிவேன். மரியாதை என்பது பழகும் விதத்தில் வருவது. அன்பு என்பது எதிர்பாராமல் அள்ளித்தருவது.

சிலரிடம் பேசினால் நிம்மதி சிலரிடம் பேசாமல் இருந்தால் நிம்மதி என நம் தகுதியை நாமே நிர்ணயம் செய்கிறோம். தெருவில் கிடக்கும் காகிதமாக யாரையும் உதாசீனப்படுத்தாதீர். நாளை அது பட்டமாகப் பறந்தால் நீங்களும் நானும் கூட சற்று நிமிர்ந்து பார்ப்போம்.

கோபம் மனதில் இருக்கக்கூடாது, வார்த்தையில்தான் இருக்க வேண்டும். அன்பும் மரியாதையும் வார்த்தையில் மட்டும் இருக்கக்கூடாது, மனதிலும் இருக்க வேண்டும்.

அன்பைக் கொடுப்போம், பெறுவோம், உணர்வோம், மதிப்போம்!

(நதி ஓடும்....)

Next Story