சரக்கு ஆட்டோ மீது கார் மோதல்; தாய்–மகன் உள்பட 3 பேர் பலி


சரக்கு ஆட்டோ மீது கார் மோதல்; தாய்–மகன் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 18 March 2018 4:30 AM IST (Updated: 17 March 2018 10:05 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே சரக்கு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆன்மிக சுற்றுலா வந்த கேரளாவை சேர்ந்த தாய்–மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேளாங்கண்ணி,

கேரளா மாநிலம் சித்தூரை அடுத்த சர்கார் பகுதியை சேர்ந்தவர் பகவதீஸ்வரன் (வயது59). இவர், தனது மனைவி கிருஷ்ணவேணி (50), மகன் திலீப் (30), உறவினர்கள் தரணி (23), ஆறுசாமி (59) ஆகியோருடன் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலாவாக காரில் வந்தனர். நேற்று முன்தினம் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்றுவிட்டு, இரவு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள மாதா பேராலயத்திற்கு வந்தனர். பின்னர் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கோவிலுக்கு செல்வதற்காக வேளாங்கண்ணியில் இருந்து காரில் புறப்பட்டனர். காரை திலீப் ஓட்டினார்.

கார் வேளாங்கண்ணி ஆர்ச்சில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தது. பரவை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது கார் மோதியது. இதில் கார் தூக்கிவீசப்பட்டு, ஆட்டோவுக்கு பின்னால் சீர்காழியில் இருந்து தம்பிக்கோட்டைக்கு இறால் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் சென்ற கிருஷ்ணவேணி, திலீப், ஆறுசாமி ஆகியோர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த பகவதீஸ்வரன், தரணி மற்றும் சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த காமேஸ்வரம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (52), அவருடன் வந்த சீர்காழி பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (40), லாரி டிரைவர் சீர்காழி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (32) ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணவேணி, திலீப், ஆறுசாமி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு நாகை உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் வந்து விசாரணை நடத்தினார். வேதாரண்யத்தில் இருந்து நாகைக்கு சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விபத்து குறித்து கேள்விப்பட்டு அங்கு வந்து பார்வையிட்டார்.

Next Story