ஒருவாரத்துக்கு பிறகு மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்


ஒருவாரத்துக்கு பிறகு மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
x
தினத்தந்தி 18 March 2018 4:00 AM IST (Updated: 17 March 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை விலக்கப்பட்டதையொட்டி ஒருவாரத்துக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கன்னியாகுமரி,

இலங்கை அருகே இந்திய கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியது. இதன் காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து குமரி மாவட்ட மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக கடலுக்கு செல்லவில்லை. இதனால், மீன்பிடி தொழில் முடங்கியது.

குறிப்பாக கன்னியாகுமரி அருகே சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 250–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றன. விசைப்படகு மீனவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்று மீன் பிடித்துவிட்டு இரவில் கரை திரும்புவார்கள். புயல் எச்சரிக்கையையொட்டி சின்னமுட்டம் மீனவர்கள் கடந்த சில தினங்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

இதுபோல், குளச்சல், தேங்காப்பட்டணம், முட்டம் போன்ற மீன்பிடி துறைமுகங்களில் இருந்தும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால், விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்ல அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருந்தனர்.

இந்தநிலையில், புயல் எச்சரிக்கை விலக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் குமரி மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு  செல்ல தொடங்கினர். நேற்று முன்தினம் குளச்சல் பகுதியில் இருந்து சிலர் கடலுக்கு புறப்பட்டனர்.

இதன்தொடர்ச்சியாக நேற்று சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதுபோல், முட்டம், தேங்காப்பட்டணம், குளச்சல் போன்ற பகுதிகளில் இருந்தும் மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்கினர்.

இதனால், கடந்த ஒரு வாரத்திற்கு பின்பு குமரி மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகங்கள் களைகட்ட தொடங்கியது.

Next Story