விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ தரத்துக்கு உயர்த்தப்படும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேச்சு


விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ தரத்துக்கு உயர்த்தப்படும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேச்சு
x
தினத்தந்தி 18 March 2018 3:30 AM IST (Updated: 17 March 2018 11:48 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ தரத்துக்கு உயர்த்தப்படும் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.

விக்கிரவாண்டி, 

விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மைய கட்டிடம், மின்னணு நூலகம், நவீன அறுவை சிகிச்சை அரங்கம், புறநோயாளிகள் உயர் சிகிச்சைப்பிரிவு ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.பி.க்கள் லட்சுமணன், ராஜேந்திரன், ஏழுமலை, காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, ராதாமணி, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வீன்ஜோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் வனிதாமணி அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு அறுவை சிகிச்சை மையம் மற்றும் புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துகுத்து விளக்கேற்றினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு 11 ஆயிரம் பிரசவம் நடந்துள்ளது. சுமாராக நாளொன்றுக்கு 25 பிரசவங்கள் என கணக்கிட்டுள்ளனர். மேலும் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. நாம் மற்ற மாநிலங்களை ஒப்பிடாமல் மற்ற நாடுகளை ஒப்பிடும் அளவுக்கு இத்துறையில் முன்னேறியுள்ளோம். ரூ.190 கோடி செலவில் மாநிலம் முழுவதும் 72 அவசர சிகிச்சை மையங்களை திறந்துள்ளோம். பிரசவத்திற்கு சிங்கப்பூரையும், அவசர சிகிச்சைக்கு ஆஸ்திரேலியாவையும் நாம் முன்மாதிரியாக கொண்டுள்ளோம். அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் கிளை விரைவில் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திறக்கப்படும்.

மத்திய அரசு பாராட்டுகின்ற வகையில் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டு வருகிறது.விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். அதற்கான எல்லா திட்டங்களும் அதற்கான உபகரணங்களும் படிப்படியாக வழங்கப்படும்.

ஏற்கனவே சென்னை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், ராயப்பேட்டை ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விபத்து சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டையில் விபத்து சிகிச்சை மையம் தொடங்கப்படும் என்று கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக ரூ.5 கோடி செலவில் விபத்து சிகிச்சை மைய பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு திண்டிவனத்தில் விபத்து சிகிச்சை மையம் தொடங்கப்படும்.

மேலும் தாய் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஆஸ்திரேலியா நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, விபத்துகளில் காயமடைபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் நிச்சயமாக உயிரிழப்புகள் தடுக்கப்படும். விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்படும். விரைவில் மருத்துவ மேற்படிப்பும் இம்மருத்துவ கல்லூரியில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story