திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் பலத்த மழை: 40 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் பலத்த மழை பெய்தது. இதனால் 40 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் மின்னல் தாக்கி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோடை வெயில் தொடங்கியது. ஆரம்பித்த சில நாட்களிலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
திருப்பத்தூர் நகரை பொருத்தமட்டில் பாதாள சாக்கடைக்காக தெருக்கள், சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மண்சாலையாக மாறி புழுதி ஒருபுறம் பறக்க, வெயில் கொடுமை ஒருபுறம் என இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் சாலையில் பறக்கும் அனல்காற்று, தூசியை தாங்க முடியாமல் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வெளியே சென்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நள்ளிரவு முழுவதும் மழை நீடித்தது.
இதனால் திருப்பத்தூர் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி, கழிவுநீருடன் மழைநீர் கலந்து தெருக்கள், சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
மேலும் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு ஜார்ஜ்பேட்டை அபாய்தெருவில் கழிவுநீருடன், மழைநீர் கலந்து 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு சில வீடுகளில் உள்ள மின் உபயோக பொருட்கள் சேதமடைந்தது. அதேபோல், நகரில் உள்ள 36 வார்டுகளிலும் ஆங்காங்கே மழைநீரும், கழிவுநீரும் கலந்து வெள்ளமாக சூழ்ந்து காணப்பட்டது. சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
இதுகுறித்து அபாய்தெரு மக்கள் திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாரிகள் உடனடியாக வந்து, கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை மழைநீர் சேறும், சகதியுமாக பாதாள சாக்கடை பள்ளங்களில் தேங்கியிருந்ததால், கார், வேன், லாரி, ஆட்டோ போன்ற வாகனங்கள் ஆங்காங்கே சிக்கி கொண்டன. மேலும் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியிருந்ததால், வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த பால்னாங்குப்பம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சேகர் என்பவரின் வீட்டின் அருகில் உள்ள தென்னைமரத்தில் மின்னல் தாக்கியது. இதில் வீட்டின் மேற்கூரையில் கீறல் விழுந்தது.
மேலும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சேகரின் மனைவி மஞ்சுளா (வயது 60), மகன்கள் சிவா (29), ஜீவா (25), உறவினர் திலகா (40) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் மஞ்சுளா, திலகா ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வீட்டில் இருந்த துணி, மின்சார வயர் லேசாக எரிந்து கருகியது.
ஆங்காங்கே ஒரு சில சேதங்களை இந்த பலத்த மழை ஏற்படுத்தி இருந்தாலும், சுட்டெரித்த கோடை வெயிலை தாங்கும் அளவிற்கு சற்று இதமாக இருந்தது. கிராமப்புறங்களில் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் சிறிது உயர்ந்தது. இதனால் குடிநீர் பிரச்சினையில் தவித்து வந்த மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story