நதிகளை தேசியமயமாக்கி கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும், அய்யாக்கண்ணு பேட்டி


நதிகளை தேசியமயமாக்கி கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும், அய்யாக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 18 March 2018 4:30 AM IST (Updated: 18 March 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

நதிகளை தேசியமயமாக்கி கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.

சிவகங்கை,

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு, கன்னியாகுமரி முதல் சென்னை வரை விவசாயிகளுடன் நடைப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள், விவசாயிகளிடம் நதிகள் இணைப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்ட அவர் நேற்று முன்தினம் தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைப்பயணம் சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்.

அப்போது சில இடங்களில் அவருக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று சிவகங்கை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி மானாமதுரை பகுதிகளில் நடைப்பயணம் சென்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் நதிகள் இணைப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்.

சிவகங்கையில் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதுடன் பல இடங்களில் பயிர்கள் கருகிவிட்டன. பயிர் இழப்பீட்டு தொகை முழுமையாக விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. பயிர்க்கடனும் கிடைக்கவில்லை. எனவே விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இறக்குமதி செய்வதால் மலட்டுத்தன்மை ஏற்படும் ஆபத்து உள்ளது. இதுதவிர விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை தரப்படவில்லை. அத்துடன் சாகுபடி செய்ய தண்ணீர் வழங்கப்படவில்லை. எனவே மத்திய அரசு நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.

கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். காவிரியில் வெள்ளம் வரும்போது அது வீணாக கடலில் கலக்காமல் தடுக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் கால்வாய் வெட்டி அதில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் லதாவிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார்.

முன்னதாக திருப்புவனத்தில் இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த வேல் தலைமையில் கட்சியினர் அய்யாக்கண்ணுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது எதிர்ப்பு தெரிவித்த 7 பேரை திருப்புவனம் போலீசார் கைது செய்தனர். 

Next Story