கோவை மாநகராட்சி பகுதியில் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சொத்து வரி


கோவை மாநகராட்சி பகுதியில் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சொத்து வரி
x
தினத்தந்தி 18 March 2018 4:00 AM IST (Updated: 18 March 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சி பகுதியில் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சொத்து வரி வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை,

கோவை மாநகராட்சிக்கு சொத்துவரி பிரதான வருவாயாக உள்ளது. மொத்தம் ரூ.149 கோடியே 50 லட்சம் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ரூ.128 கோடி வசூலாகி உள்ளது. மீதி தொகையை வசூலிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சொத்துவரி வசூலில் ஈட்டப்படும் வருவாயில் பெரிய தொகை மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ஒதுக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியை மாநகராட்சி எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதுள்ளது.

மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கவும், கடன் சுமையை குறைக்கவும் வரிசீராய்வு, குடிநீர் கட்ட ணத்துக்கான வைப்புத்தொகையை உயர்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குப்பை வரியாக மட்டும் ரூ.90 லட்சம் வசூலிக்கப்பட் டுள்ளது.

இந்த நிலையில் கல்வி நிறுவனங்களுக்கு சொத்துவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் ஹர்மீந்தர்சிங், மாநகராட்சி கமிஷனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில், அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை தவிர்த்து, மற்ற தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கு சொத்துவரி நிர்ணயித்து வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கணக்கிட்டு சொத்துவரி வசூலிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இனி அந்தந்த கல்லூரி நிறுவனங்களில் அளவீடு செய்து கேட்பு நோட்டீஸ் வினியோகிக்கப்படும். தனியார் கல்வி நிறுவனங் களுக்கு சொத்துவரி வசூலிக்கப்படுவதால், கோவை நகரில் மட்டும் ரூ.30 கோடி முதல் ரூ.50 கோடிவரை கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது’ என்றனர். 

Next Story