வேப்பூரில் சத்துணவு ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை-பணம் கொள்ளை
வேப்பூர் அருகே சத்துணவு ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேப்பூர்,
வேப்பூர் அருகே உள்ள ரெட்டாக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 55). இவர் காஞ்சிராங்குளம் அரசு பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவருடைய மனைவி ஜெயசந்திரா (45). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
ஜெயராமன் கடந்த 2016-ம் ஆண்டு வேப்பூரில் புதிதாக வீடு கட்டினார். இதையடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் சில நாட்கள் வேப்பூரிலும், சில நாட்கள் ரெட்டாக்குறிச்சியில் உள்ள வீட்டிலும் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயராமன் வேப்பூரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் ரெட்டாக்குறிச்சியில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு ஜெயராமன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு ஒரு அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து வேப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஜெயராமன் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் மோப்பமிட்ட அந்தநாய், வீட்டின் பின்பக்கம் வழியாக தேசிய நெடுஞ்சாலை வரை சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story